ஸ்டாலின் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர்களின் முரண்பட்ட பேச்சு –  பின்னணி என்ன?

slider அரசியல்
cb radhakrdishnan – சிபி ராதாகிருஷ்ணன்

 

தமிழக அரசியலில் மத்திய ஆளுங்கட்சியாக இருந்துவரும் பா.ஜ.க.வின் நேரெதிர் நிலைபாட்டில் இயங்கிவரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து தமிழக பா.ஜ.க.வின் இரண்டு முக்கிய தலைவர்கள்  கூறிவரும் கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் நடைபெற்ற தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்  திருமண விழாவில் தமிழக பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும்போது, “கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திகழ்கிறார். தமிழக அரசியலில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் இருக்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது’’ என்று ரொம்பவே புகழ்ந்து பேசினார்.

 

MK-stalin – மு.க.ஸ்டாலின்

சில தினங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க.வின் இன்னொரு முக்கிய தலைவரான ஹெச்.ராஜா, “ப.சிதம்பரம் போலவே தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் சிறை செல்வார். தவறு செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட போகிறார்கள். ஸ்டாலின் விரைவில் ப. சிதம்பரம் போல தண்டிக்கப்படுவார்’’ என்று மிகக் கடுமையாக கருத்து சொன்னார்.

 

 

h raja – ஹெச் ராஜா

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து, இந்த இரு தலைவர்கள் பேசியதற்கும், தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பெரிய தடையாக இருப்பதும் ஸ்டாலினும், தி.மு.க.வும்தான்.  தேசிய அளவில் கூட பா.ஜ.க.வின் பெரிய போட்டி தற்போது காங்கிரஸ் அல்ல, தி.மு.க.தான். அதனால் ஸ்டாலினை கடுமையாக எதிர்த்தால் தனக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று ஹெச். ராஜா நினைக்கிறார்.

அதே சமயம் ஸ்டாலினை புகழ்ந்தால் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க வசதியாக இருக்கும். இதை வைத்தே தலைவர் பதவியை அடையலாம். மேலும், தி.மு.க.வுடன்  இணக்கமாக செல்வது தமிழக பா.ஜ.க.விற்கு எதிர்காலத்தில் உதவும் என்று சி.பி. ராதாகிருஷ்ணன் நினைக்கிறார்.

இதுவரை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இந்த பதவிக்கு ஹெச்.ராஜாவும் தீவிரமாக முயற்சித்து வருகிறார். சி.பி.ராதாகிருஷ்ணனும் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு தமிழகத்தில் தி.மு.க. குறித்தும், அதனோடு கூட்டணி குறித்தும் வருங்காலத்தில் என்ன திட்டம் இருக்கிறது என்பதைக்கூட இந்த இருவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவதன் மூலம் கணிக்க முடியும்.

தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *