மாறன் சகோதரர்களை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம்? – அதிர்ச்சியில் தி.மு.க.!

slider அரசியல்
கலாநிதி மாறன் – தயாநிதி மாறன்

தற்போது ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் வழக்கு நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.   எப்படியும் இந்த வழக்கும் தன்னை சிறைச்சாலைக்கு அனுப்பும் என்று தெரிந்து கொண்ட சிதம்பரம், ஏர்செல் வழக்கில், தான் கைது செய்யப்படாமல் இருக்க டெல்லியிலுள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்த மனு மீது கடந்த செப்டம்பர் 6-ம் தேதி நீதிபதி ஷைனி தீர்ப்பு வழங்கினார். அப்போது, “இதே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனை ஏன் கைது செய்யவில்லை?” என்று நீதிபதி கேட்டதால், தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிபதி ஷைனி தன் தீர்ப்பில், ‘’ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகள் மிகப் பெரியவை அல்ல.   இந்த வழக்கில் ப.சிதம்பரம் வெறும் 1.13 கோடி பணத்தை பெற்று பலனடைந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், இந்த தொகை இதே வழக்கில் தயாநிதி மாறன் மூலம் கைமாறிய ரூ 749 கோடியை விட சிறிய தொகைதான். அப்படியிருக்கும் போது தயாநிதி மாறன் உள்ளிட்டோரை மட்டும் விசாரணை அமைப்புகள் கைது செய்யாதது ஏன்? ஒரே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரிடம் விசாரணை அமைப்புகள் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்ப்பது சட்டத்துக்கு புறம்பானது’’ என்றார் .

கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்தார் என்றும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதான குற்றச்சாட்டில், இவர்கள் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், ப. சிதம்பரம், கார்த்தி உள்ளிட்டோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படுவதற்கு முன்னர் ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் அவரது சகோதரர் கலாநிதிமாறனும் வற்புறுத்தியதாக அவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஷைனியே  ‘ஏன் இந்த வழக்கில் தயாநிதி சகோதரர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை?’ என்று கேட்டுள்ளதால், விரைவில் ஏர்செல் மேக்சிஸ் வழக்குக்காக தயாநிதி மாறன் சகோதரர்கள் கைது செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகிறது. இந்த தகவல் தி.மு.க. வட்டாரத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *