நாம் ஏன் தனித்து போட்டியிடக் கூடாது! – கே.எஸ். அழகிரி ஆவேசம்

slider அரசியல்

 

ks azhagiri – கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை நடத்திடும் வேலைகளில் மாநில தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டியது தான் நிலுவையில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவிருந்த வசந்தகுமார், எம்.பி.யாக போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே, இது எங்களுக்கான தொகுதி என்று காங்கிரஸ் அடிக்கடி சொல்லி வருகிறது.  இந்த விவகாரத்தில் தி.மு.க.வுக்கும், காங்கிரஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் நிகழ்ச்சிகளும், பேச்சுகளும் தொடர்வதால் இந்தக் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,    காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாங்குநேரியில் இன்று (செப்டம்பர் 6-ம் தேதி)  நடந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய தமிழக தலைவர் கே எஸ் அழகிரி, “தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதைப் பற்றி விவாதம் நடத்தவே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா?  மற்ற கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது.  குறைந்த பட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற முடியுமா?  தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும். தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், உயிர் நாடி. இங்கு கூட்டணியின்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாதா?” என பேசியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த பேச்சு தி.மு.க. தலைமையை  கோபப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

கே.எஸ்.அழகிரியின் இந்த செயற்குழு பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘’ தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நாங்குநேரியில்  நடைபெற்றது செயல்வீரர்கள் கூட்டம். அங்கு அவ்வாறு தான் பேச வேண்டும்’’ என்று சொல்லியுள்ளார்.

இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே காங்கிரஸ் தரப்பில் ஒரு பேச்சும், தி.மு.க. தலைமையில் வேறு ஒரு எண்ணமும் இருப்பது தொடர்ந்து நீடிப்பதால், இந்த விவகாரம் பெரும் மோதலுக்கு வழி வகுக்க அதிக வாய்ப்பிருப்பதாக, தமிழக அரசியல் களத்தில் கருத்துகள்  வேகமாக பரவ தொடங்கியிருக்கிறது.

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *