வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மிரட்டிய பும்ரா

slider விளையாட்டு
bumrah – பும்ரா

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி அங்கு மூன்று வடிவிலான போட்டிகளையும் (ஒருநாள், டி-20, டெஸ்ட்) வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குறிப்பாக, டெஸ்ட் மேட்சில் அவர் வீசிய பந்துகளை எதிர்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அலறினர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பும்ரா 13 விக்கெட்கள் வீழ்த்தினார். அதில் இரண்டு இன்னிங்ஸ்ஸில் 5 விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளார். அது மட்டுமின்றி, ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்து அசத்தினார் பும்ரா. இதனால் இந்திய அளவில் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் பும்ரா.   முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் 8 ஓவர்கள் மட்டும் பந்துவீசி 7 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார் பும்ரா. இது போன்ற பந்துவீச்சை பார்த்ததாக நினைவில் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு ஜாம்பவான்களே பும்ராவை பாராட்டியும் உள்ளார்கள்.

இதுபற்றி  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் பும்ரா பற்றி பேசிய சில விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  அவர்களில் சிலர் பும்ராவை மதுபானங்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளனர். அவர் பந்து வீசுவது ஜூஸ் குடிப்பது போல தான் இருக்கும். ஆனால், தலை சுற்றி விடும். எப்படி அவர் குறைந்த தூரம் ஓடி வந்து அத்தனை வேகத்தை உண்டாக்குகிறார். அவர் இந்தியனா? அவர் மனிதனா? என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள்.

இந்த மனிதர் பும்ரா ரம் மாதிரி. உங்களை வேகமாக சாய்த்து விடுவார் என ஒருவர் அலப்பறையாக ரம்முடன் பும்ராவை ஒப்பிட்டு பேசி காரணம் கூறி இருக்கிறார்.

ஜமைக்காவின் பல ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த ஜமைக்கன் மதுபான பெயர்களை கூறி, பும்ராவை பாராட்டி இருக்கிறார்கள். அவரை பார்த்தாலே வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு  ‘ஹேங்ஓவர்’ தலைவலி வந்துவிடும் என்றும் கூறி உள்ளனர்.

மேலும் சிலர், பும்ரா இந்தியர் என்றாலும், அவருக்குள் இருப்பது ஜமைக்கன் ஆத்மா. அதனால் தான் அவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் போல பந்துவீச்சில் மிரட்டுகிறார் என்றும் கூறி உள்ளனர்.

இங்கு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பும்ரா டெஸ்ட் தரவரிசை முன்னேற்றம் கண்டு வெகுவிரைவிலேயே மூன்றாம் இடத்தை பிடித்து வியப்பிலும் ஆழ்த்தியுள்ளார்.

பும்ராவின் இந்த அதிவேக பாய்ச்சல் மூலம் இந்திய கிரிக்கெட் அணி மேலும் பல உயரங்களை தொடும் என்பது உறுதியாகியுள்ளது.

எஸ்.எஸ்.நந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *