வெடிக்கும் பா.ஜ.க – சிவசேனா மோதல்

slider அரசியல்
உத்தவ் தாக்கரே – uthav thackeray

பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளில் முக்கிய அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி,  ‘நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக காங்கிரஸை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவிக்கும் கருத்துகளுக்கு  மதிப்புக் கொடுத்து பா.ஜ.க நடந்து கொள்ள வேண்டும்’ என்று சமீபத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறது. கூட்டணி கட்சியான சிவசேனாவின் இந்த கருத்து ஆளும் கட்சியான பா.ஜ.க. வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்குமுன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் தற்போதைய பொருளாதார தேக்க நிலை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மன்மோகன் சிங்கின்  இந்த கருத்தை மத்திய அரசு  உடனடியாக நிராகரித்தது.  மேலும், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது. இப்போது இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது எனவும் பதில் தரப்பட்டது.

இந் நிலையில்தான் சமீபத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துகளை உள்வாங்கி மத்திய அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியிருக்கிறது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், “பொருளாதார தேக்க நிலை விவகாரத்தில் எந்த ஒரு அரசியல் பார்வையும் இருக்கக் கூடாது. ஜம்மு- காஷ்மீர் விவகாரமும் பொருளாதார தேக்க நிலையும் இருவேறுபட்ட விவகாரங்கள். பொருளாதார தேக்க நிலையில் அரசியல் பார்க்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நிலைமையை சரி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்’’ என்று எழுதியுள்ளது.

இப்படி ஒரு எதிர் பாய்ச்சல் தன் பக்கமிருந்தே வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை மோடி அரசு! மேலும், சென்றமுறை ஆட்சியின்போதும் பா.ஜ.க. அரசின் பல திட்டங்களை விமர்சித்திருந்த சிவசேனா, இந்தமுறை ஆரம்பத்தில் இருந்தே குறை சொல்லத் தொடங்கிவிட்டது. இது வரும் காலங்களில் பா.ஜ.க. அரசுக்கு பெரும் சங்கடங்களில் ஒன்றாகவும் மாறலாம் என்றும், மராட்டிய மாநிலத்துக்காக சிவசேனாவை பொறுத்துக் கொள்வது என்பது தேசிய அளவில் அதன் இமேஜை குலைத்து பாதிப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *