தலைவர் பதவியை ரஜினி ஏற்க மாட்டார் –  எம்.பி. திருநாவுக்கரசர்

slider அரசியல்
ரஜினிகாந்த் – Rajinikanth

தமிழக பா.ஜ.க. தலைவராகவிருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி நிரப்பப்பட வேண்டும். பா.ஜ.க.விலே இந்த பதவிக்கு  பலர் மோதுகின்றனர். இந் நிலையில், சமீபமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசிவருவதால், அவரை தமிழக பா.ஜ.க. தலைவராக கொண்டுவர பிரதமர் மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளது போன்ற தகவல்கள் அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஆனால், இதனை மறுக்கும் விதமாக இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) ரஜினி  பா.ஜ.க.வில் இணைய மாட்டார் என்றும், அவர் அடுத்த வருடம் புதிய கட்சியை துவங்கப் போவது உறுதி என்கிற தகவலும் கிளம்பியிருக்கிறது.

பா.ஜ.க.வின் டெல்லி மேலிடம் ரஜினியிடம் மாநில தலைவர் பதவி குறித்து பேசியது உண்மைதான். ஆனால், அப்படி பேசியவர்களிடம், ரஜினி பிடி கொடுக்காமல், தனிக்கட்சி தொடங்குவதையே தனது ரசிகர்கள் விரும்புவதாக தெரிவித்துவிட்டார். அடுத்த ஆண்டு 2020-ல் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும்  ‘தர்பார்’ தொடர்ந்து அவர் புதிய கட்சி தொடங்குவது உறுதி. ’தர்பார்’ படத்துக்கு பிறகு இன்னும் சில படங்கள் இருந்தாலும், அது ஒன்றும் கட்சி தொடங்குவதற்கு இடைஞ்சல் இல்லை என்றும் சொல்கிறது ரஜினிக்கு நெருங்கிய வட்டாரம்.

இது குறித்து திருச்சி பாராளுமன்ற எம்.பி.யும், ரஜினியின் நெருங்கிய நண்பரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் கூறுகையில், ‘’பா.ஜ.க.வில் உறுப்பினராக இல்லாத ஒருவரால் எப்படி அக்கட்சியின் மாநில தலைவராகிவிட முடியும்? மாநில தலைவர் பதவி என்றில்லை, தேசிய தலைவர் பதவியை கொடுத்தாலும் கூட அவர் ஏற்க மாட்டார். எனவே, இதெல்லாம் வேடிக்கையான பேச்சுகள் என்பதால், இதை நான் சீரியஸாக பார்க்கவில்லை’’ என்று கூறியுள்ளார்.

ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பிருக்கிறதே ஒழிய, நிச்சயம் பா.ஜ.க.வின் மாநில தலைவராக ஆவதற்கு சம்மதிக்க மாட்டார் என்பதே ரசிகர்களின் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் ரஜினியின் இயல்பாக இருக்க முடியும்.

  • தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *