எடியூரப்பா மீது கோபத்தில் அமித்ஷா

slider அரசியல்
yediyurapa with amithsha

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினரால் ஆகஸ்ட் 3ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனால், கர்நாடகாவில் பெங்களூரு உட்பட இவரது சொந்த மாவட்டமான ராம்நகர் தொடங்கி மாநிலத்தின் பல இடங்களிலும் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க. முதல்வரான எடியூரப்பா, “டி.கே.சிவக்குமார் கைதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று கூறியுள்ளது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவக்குமார் கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ‘’சிவகுமாரின் கைது என்பது பா.ஜ.க.வின் பழிவாங்கல் நடவடிக்கை. பொருளாதாரம் மற்றும் ரூபாய் வீழ்ச்சியை மறைத்து, வேலை இழப்பு போன்ற பிரச்சினைகளை மறைக்கும் ஒரு முயற்சி” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று ஆகஸ்ட் 4-ம் தேதி  செய்தியாளர்கள் சந்திப்பில், “ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன். டி.கே.சிவகுமாரின் கைது எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. அவர் விரைவில் விடுதலையடைய வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். நான் என் வாழ்க்கையில் யாரையும் வெறுக்கவில்லை, யாருக்கும் தீங்கு விளைவித்ததும் கிடையாது. நீதி அதன் கடமையை செய்யும். சிவகுமார் விடுதலையாகும் செய்தியறிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்’’ என்று பேசினார்.

இந்த பேச்சு கர்நாடக பா.ஜ.க.வினரை மட்டுமல்ல, அமித்ஷா உட்பட தேசிய தலைவர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது என்கிறது டெல்லி பா.ஜ.க. வட்டாரம்.

இதில் ஒரு முக்கியம் விஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தபோது, இதே காங்கிரஸைச் சேர்ந்த சிவகுமாருக்காக அரசு கையகப்படுத்திய நிலத்தை விடுவித்ததால்தான், கடந்த கால ஆட்சியின்போது, எடியூரப்பாவுக்கு எதிராக வழக்குகள் பாய்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பா.ஜ.க.வின் தேசிய தலைமை அரைகுறை மனதுடன் சமீபத்தில் தான் எடியூரப்பாவை கர்நாடக முதல்வராக பதவியேற்க சம்மதித்து. இப்போது எடியூரப்பா இப்படி பேசியிருப்பதால் விரைவில் எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

தொ.ரா.ஸ்ரீ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *