அடுத்து சோனியா, ராகுல்? அதிர்கிறது காங்கிரஸ் வட்டாரம்

slider அரசியல்
sonia gandhi-rahul gandh

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில்  அடுத்து நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க  மோடி அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வருவதால், தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் மூலம் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இவர்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர்.  ஆனால், இந்தக் கணக்கை  மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறியே இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.  பா.ஜ.க.வின் அதிரடி அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி தான் இந்த வழக்கை தொடர்ந்தவர்.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும் நாட்களில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக, சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறை இரண்டும் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது வழக்கு பதியலாம். அடுத்து அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் கூடும் என்பதாக வெளியாகியுள்ள தகவலாலே தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரஸை பொறுத்தவரை ஏற்கெனவே ப.சிதம்பரம் மற்றும் சிவக்குமார் கைதுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்றே தெரியாமல் மிகவும் குழம்பி கிடக்கிறது. இந்நிலையில், தலைவர் சோனியா காந்தி மீதும், ராகுல் காந்தி மீதும் சி.பி.ஐ. கைது செய்யலாம் என்கிற தகவலால் ரொம்பத்தான் ஆடிபோயியுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *