கூட்டணிக்கு வேட்டு வைக்கும் சுப்ரமண்ய சுவாமியின் அதிரடி பேச்சு.

slider அரசியல்
subiramaniyan swamy – சுப்பிரமணியன் சுவாமி

பா.ஜ.க., எம்.பி.யும், தேசிய அளவில் அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்றவருமான சுப்ரமண்ய சுவாமி, அ.தி.மு.க. தனித்து செயல்படுவதே அதற்கு நல்லது என்கிற வகையில் சமீபத்தில் பேசியிருப்பது, தமிழக பா.ஜ.க. வட்டாரத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் எதிர்காலம் குறித்த பத்திரிகையாளர்கள் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “தமிழகத்தில் பா.ஜ.க. வளர வேண்டும் என்றால் இந்துத்துவாவை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டும்.   இந்து தீவிரவாதம் வளர்ந்து வருகிறது என கூறிய ப. சிதம்பரத்திற்கு தக்க பதில் கிடைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தனித்து செயல்பட்டாலே அந்த கட்சிக்கு நல்லது’’ என்று தெரிவித்தார்.

இதே சுப்ரமண்ய சுவாமி, தமிழகத்தில் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிட்ட போதிலும் அ.தி.மு.க.வின் இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்தந் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்ற பா.ஜ.க. ஆட்சியின்போதுகூட நிதி அமைச்சராக இருந்து சமீபத்தில் மறைந்த அருண் ஜெட்லியை அதிகம் விமர்சித்தார் சுப்ரமண்ய சுவாமி. இந்த ஆட்சியிலும் நிதி அமைச்சராகவுள்ள நிர்மலா சீதாராமன் மீது பொருளாதார நிர்வாகம் குறித்து அதிகம் விமர்சித்து வருகிறார். இப்போது அரசியல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் எம்.பி.யான சுப்பிரமண்ய சுவாமி, தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தனித்து செயல்படுவது நல்லது என்ற பொருளில் பேசியிருப்பது ஒருவகையில் தன் சொந்த கட்சியான பா.ஜ.க.வை மட்டம் தட்டும் செயல்தான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

இதே பா.ஜ.க.வில் வேறெந்த எம்.பி.யோ அல்லது மாநிலத் தலைமையோ இதுபோல் பேசியிருந்தால் உடனடியாக கட்சி நடவடிக்கை பாய்ந்திருக்கும்.  ஆனால், பேசியிருப்பது அதிரடி அரசியல்வாதி சுப்பிரமண்ய சுவாமி என்பதால் பா.ஜ.க.விடமிருந்தும் வழக்கம்போல் மௌனம் தான் பதிலாக கிடைக்கும்.

எம்.டி.ஆர். ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *