அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் – சீமான் பேச்சால் சூடான அரசியல் களம்!

slider சினிமா
Vijay – Seeman

 

தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்துகளுக்கும், பேச்சுகளுக்கும் அரசியல் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் பெரும் விமர்சனங்கள் எப்போதுமே எழும். அந்த வகையில் சீமான், விஜய்யை நடிகர் ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பை தமிழகத்தில் உண்டாக்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் சீமான் பேசும்போது, “நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற தகுதியானவர் தம்பி விஜய்” என்று பாராட்டி சொன்னார். வேறு ஒரு இயக்குநரோ அல்லது நடிகரோ, இதுபோன்ற கருத்தை தெரிவித்து இருந்தால் பரபரப்பு ஆகப் போவதில்லை. ஆனால் அரசியல் கட்சியை நடத்தி வரும் சீமான் இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சியுடன் விஜய் நெருக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி அரசியல்  வட்டத்தில் உடனடியாக எழுந்திருக்கிறது. மேலும், சீமானுக்கும், விஜய்க்குமான நட்பு இன்று நேற்று உள்ளது அல்ல, நீண்ட காலமாக இருந்து வரும் ஒன்று என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மேலும், சமூக பொறுப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விஜய் நடித்து சமீபத்தில் வெளியான  ‘மெர்சல்’ மற்றும்  ‘சர்க்கார்’ ஆகிய திரைப்படங்களில், ஜி.எஸ்.டி. முதல் உள்ளூர் கந்துவட்டி அரசியல் வரை, விலாவாரியாகப் பேசினார். அடுத்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வீட்டிற்கும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கும் நடிகர் விஜய் திடீரென நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார். இப்படி திரைப்படங்களில் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையிலும் சமூக பொறுப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது என்கிற தகவலும், பேச்சும் அதிகமாகிவரும் நிலையில் சீமான் அடுத்த தமிழக சூப்பர் ஸ்டார் என விஜய்யை புகழ்ந்து பேசியதையும் பார்க்க வேண்டும், இதன்மூலம் விஜய்யும்,  சீமானும் அரசியல் ரீதியாக ஏதேனும் ஒரு நேர்க்கோட்டில் இணைவது நடந்து கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுவது சகஜம் தான் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

இது ஒருபுறமிருக்க, இப்படி இளைய தளபதி விஜய்யை சூப்பர் என்கிற அந்தஸ்துக்கு உயர்த்துவதன் மூலம் தி.மு.க.வை நேரிடையாக எதிர்க்கும் கட்சியாக முன்னிற்கும் நாம் தமிழர் கட்சி அதற்கு விஜய்யை பயன்படுத்த  திட்டம் ஏதும் வைத்திருக்கிறதா என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில் தான், முரசொலி செல்வம் மற்றும் செல்வி தம்பதியினரின் பேத்தி நிச்சயதார்த்த விழா செப்டம்பர்  2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதற்கு விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த விழாவில் கலந்து கொள்ள சென்ற இளைய தளபதி தி.மு.க. தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான ஸ்டாலினை சந்தித்து இயல்பாக பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இளைய தளபதி கலந்து கொண்டதன் மூலம் சீமான் பேச்சுக்கு பின் கிளம்பிய பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது என்ற கமெண்ட் சமூக ஊடகங்களில் அதிகளவு இடம் பிடித்திருக்கிறது. தொடர்ந்து இடம் பிடித்தும் வருகிறது.

நிமலன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *