ப.சிதம்பரத்தை அடுத்து… அதிர்ச்சியில் காங்கிரஸ்!

slider அரசியல்
tk sivakumar – டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தை அடுத்து கர்நாடகா மாநிலத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருக்கும் டி.கே. சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களில்  பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமாருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 29-ம் தேதி) தள்ளுபடி செய்தது. இவரது மனு தள்ளுபடியான நிலையில் புதிய சம்மனை சிவகுமாருக்கு அமலாக்கத்துறை உடனடியாக நேற்றே அனுப்பியுள்ளது.  அந்த சம்மனில் இன்று (ஆகஸ்ட் 30-ம் தேதி)  மதியம் 1.00 மணியளவில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜராக வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இது குறித்து இன்று காலை (ஆகஸ்ட் 30-ம் தேதி) செய்தியாளர்களை பெங்களூருவில் சந்த்தித்தார் டி.கே.சிவக்குமார். அப்போது சிவக்குமார் கூறுகையில், ”யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். நானும் டென்ஷன் ஆகவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் எந்த பாலியல் தவறோ அல்லது யாருடைய பணத்தையோ எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு எதிராக எந்தக் குற்றமும் இல்லை. நேற்று இரவு 9.40 மணிக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து எனக்கு சம்மன் கிடைத்தது. இன்று மதியம் 1 மணிக்கு டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கெட்ட நோக்கத்தில் குறைந்த கால அளவு இடைவெளியில் என்னை ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும், நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நமது சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் என்னுடைய வழக்கறிஞரை சந்திக்கவில்லை. நேற்று இரவு சம்மன் அனுப்பி அவசரமாக இன்று மதியம் 1 மணிக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனக்கு குடும்ப கடமைகள் சில உள்ளன. அதை முடித்துவிட்டு டெல்லி செல்வேன்” என்று கூறினார்.

 

டி.கே. சிவக்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கின் பின்னணியை கொஞ்சம் பார்ப்போம்:

 

கடந்த 2017 –ம் ஆண்டில் டி.கே. சிவகுமாரின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு பணம் பறிமுதல் செய்ததாக அறிவித்தது. அவரது வீடு, அலுவலகத்தில் இருந்து ரூ. 300 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர். இந்த வழக்குதான் தற்போது அவரது தலைக்கு மேலே கத்தியாக தொங்கிக் கொண்டு இருக்கிறது. துவக்கத்தில் அவரது வீட்டில் இருந்து ரூ. 300 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறி இருந்த வருமான வரித்துறை இறுதியில் வரி ஏய்ப்பு ரூ. 20 கோடி என்று வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் என்பதும் கவனிக்கதக்கது.

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல் கிளம்பியுள்ள நிலையில், அவர் மீது அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது. டெல்லி செல்லும் அவர் ஒருவேளை ப.சிதம்பரம் போல் கைது செய்யப்படவும் அதிக வாய்ப்பிருப்பதாகவே டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நிகழுமாயின் காங்கிரஸ் வட்டாரம் மிகப்பெரிய கலக்கம் அடையலாம். இதை எதிர்கொள்ள காங்கிரஸ் என்னமாதிரி அணுகுமுறையை மேற்கொள்ளவிருக்கிறது என்கிற கேள்வியும் சகலமானவர்களிடமும் எழும்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *