குறிவைக்கும் பா.ஜ.க. – எச்சரித்த ஸ்டாலின்!

slider அரசியல்
dmk mps meeting

இரண்டாவது முறையாக பா.ஜ.க பதவியேற்றதிலிருந்தே இந்தியாவிலுள்ள பல கட்சிகளிலிருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்  நாளும் பா.ஜ.க.வுக்கு தாவுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் தமிழ்நாடே பா.ஜ.க.வை முற்றிலுமாக நிராகரித்த மாநிலம் என்பதால், இங்கிருந்தும் சில எம்.பி.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதை அறிந்த தி.மு.க. தலைமை, தன் எம்.பி.க்களை தக்கவைக்கும் முயற்சியில் இறங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது.

   இந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக, நேற்று (ஆகஸ்ட் 29-ம் தேதி) தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் ஆஜராகியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி தி.மு.க.  எம்.பி.க்கள் அனைவரும் அறிவாலய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொருளாளர் துரைமுருகன், “தேசிய அளவில் பாஜக மிகவும் ஆக்ரோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்கொள்ள நாமும் ஆக்ரோஷமாக இருக்கிறோம். இதனால், பா.ஜ.க. நம்மை அச்சுறுத்த நினைக்கிறது.  நமக்கு ஆதரவான தொழில் அதிபர்களை குறி வைக்கிறது. எனவே டெல்லியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.

இதன் பின்னர் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், “எம்.பி.க்கள் அனைவரும் தொகுதிக்கு செல்ல வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாகச் செலவிட வேண்டும். தேசிய அளவில் மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றோர் கூட பா.ஜ.க.விற்கு எதிரான நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ள தயாராகிவிட்டனர். அந்த அளவிற்கு பா.ஜ.க. நாட்டில் தற்போது பலம் பொருந்திய கட்சியாக மாறிவிட்டது. அசுர பலத்துடன் இருப்பதால் பா.ஜ.க. தற்போது என்ன வேண்டுமானாலும் செய்யும்? அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் காலூன்றிய பா.ஜ.க. அடுத்ததாக கேரளா, தமிழகத்தை தான் குறி வைத்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. நம்மை தான் பிரதான எதிரியாக கருதுகிறது. அதனால் நாமும் அவர்களை அப்படி கருதுவதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், டெல்லியில் பா.ஜ.க.வின் புரோக்கர்கள் சிலர் நம் எம்.பி.க்களை சுற்றி வருவது எனக்குத் தெரியும். அவர்கள் தமிழகத்தில் காலூன்ற எதுவும் செய்வார்கள்.  ஆகவே, நம் எம்.பி.க்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

பா.ஜ.க.வை பொறுத்தவரை தமிழகத்தில் காலூன்ற பெரும் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்கிறது. மேலும், விரைவில் அதனை செயல்படுத்தவும் போகிறது. அந்த ரகசியத்தில் ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்து அதனுடன் கூட்டணி போடுவது, தேவைபட்டால் அ.தி.மு.க.வையும் அதனுடன் கூட்டணியில் இணைப்பது உட்பட தி.மு.க.வை டெல்லியில் பலமிழக்க செய்ய அந்தக் கட்சியின் எம்.பி.க்களை தன் பக்கம் கொண்டு செல்லவும் தயங்காது என்கிறார்கள் டெல்லி வட்டார அரசியல் வல்லுனர்கள்.

ஊடகங்களில் சமீபமாக அதிகமாக விவாதிக்கப்பட்டு வரும் பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி தமிழகம்தான் என்பதும், அதில் தி.மு.க. எம்.பி.க்களை கவர்வது என்பதான நடவடிக்கைகள் பா.ஜ.க.வால் வேகம் எடுத்திருப்பதன் பின்னணியிலே, தி.மு.க.விற்கு இந்த எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டிய கட்டாயமும், நெருக்கடியும் ஏற்பட்டிருக்கலாம்.

  • தொ.ரா.ஸ்ரீ.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *