மக்கள் நீதி மய்யத்தில் அதிரடி மாற்றங்கள் –  என்ன காரணம்!

slider அரசியல்
kamal with prasanth kishore

மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது. இக்கட்சிக்கு சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கும் வாக்குகள் கிடைத்தன. பதினொரு தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும், அவரது கட்சியினருக்கும் பெரும் உற்சாகத்தை அளித்தது.

இதன்  அடுத்த கட்டமாக தலைவர் கமல், சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியல் வியூகம் அமைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த நிர்வாகிகள். முக்கியமாக மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை. இதனால், கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் கமல் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

இதற்காகவே அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளார் கமல் என்றும்,  பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கட்சியில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன என்றும்,  இதுவரை ஐந்து முறை கமல்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் கூடுதல் தகவலும் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலக முக்கிய நிர்வாகி ஒருவர், “பிரசாந்த் கிஷோர் குழுவினர் என்னென்ன ஆய்வு நடத்துகிறார்கள். எங்களுக்காக என்னென்ன பணியாற்றுகிறார்கள் என்பது எங்களுக்கே தெரியாது. அந்தளவு யாரும் யூகிக்க முடியாத வகையில் இருந்து வருகிறது தலைவர் கமலின் திட்டமிடல். பிக்பாஸ், சினிமா பணிகளுக்கு இடையேயும் தலைவர் கமல் கட்சியை வலுப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது தான் எங்கள் நோக்கம். உடனடியாக ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் எங்கள் கட்சிக்கு என்று கணிசமான எம்.எல்.ஏ.க்களையாவது பெறுவோம்’ என்று கூறியுள்ளார்.

என்னதான் அரசியல் நிபுணரின் ஆலோசனைகளின்படி கட்சிக்குள் மாற்றங்கள் கொண்டு வந்தாலும், தேர்தல் வெற்றிகளைப் பொருத்தவரை மக்களின் மனங்களில் மாற்றங்கள் வரவேண்டியது மிக முக்கியம். குறிப்பாக, தேசிய அளவில் தமிழக அரசியல் என்பது பெரும் வித்தியாசங்களை கொண்டது என்பதை பல தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. அரசியல் நிபுணர் பிரசாந்த கிஷோருக்கு கூட தமிழக அரசியல் களம் பிடிபட அதிக காலம் ஆகலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

தொ.ரா.ஸ்ரீ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *