தூதூ விடும் அழகிரி –நிராகரிக்கும் ஸ்டாலின்

slider அரசியல்
ஸ்டாலின் v/s அழகிரி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி மதுரையில் வசித்து வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மதுரை எம்.பி.யாகவும் இருந்துள்ளார் அழகிரி. கலைஞர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பே தி.மு.க.விலிருந்து அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டார். தி.மு.க.வுக்கு எதிராக அவ்வப்போது  கருத்துகளை சொல்லி வந்தாலும், இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் இணையாமல் தான் இருந்து வருகிறார் அழகிரி.

கலைஞர் மறைந்த பிறகிலிருந்தே தி.மு.க.வுக்குள் நுழைய முயற்சிக்கும் அழகிரியின் நடவடிக்கைகள் இப்போதும் தொடருகிறது. தற்போது தி.மு.க.வில் ஸ்டாலினுக்கு நெருக்கடி தராத பதவியையாவது தாருங்கள் என அழகிரி தரப்பு பேசி வருகிறதாம். இதில் கலைஞர்  மகள் செல்வி உட்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்களும் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார்களாம்.

அழகிரி தரப்பிலிருந்து முதலில் கேட்பது முரசொலி அறக்கட்டளையில் உதயநிதி இருப்பது போல தி.மு.க.வின் சொத்துகள் தொடர்பான அறக்கட்டளைக்கு அழகிரி மகன் துரைதயாநிதியை நியமிக்க வேண்டும் என்பதாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே இந்த கோரிக்கை ஸ்டாலின் தரப்பால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.

அடுத்து தென்மண்டல பொறுப்பாளர் பதவி உள்ளிட்ட பல்வேறு பதவிகள் கேட்கப்பட்டனவாம். ஆனால் ஸ்டாலின் தரப்பு எதற்கும் பிடிகொடுக்கவே இல்லையாம். இதனால் ரஜினிகாந்துடன் கை கோர்க்கும் முயற்சிகளிலும் எதிர்பார்த்த திருப்தியான பதில் இல்லாததால் மீண்டும் தி.மு.க.வில் பதவி பெறுவது தொடர்பாக அழகிரி தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

இதில் கடைசி கட்டமாக  மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவியையாவது தமக்கு தந்தால் போதும் என்கிற நிலைப்பாட்டுக்கு இறங்கி வந்திருக்கிறாராம் அழகிரி. தேர்தல் பணிக்குழு செயலாளராக தாம் நியமிக்கப்பட்டு தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்திவிட்டால் தமது செல்வாக்கு கட்சியில் அமோகமாக உயர்ந்துவிடும் என்பதுதான் அழகிரியின் திட்டம் என்று கூடுதல் தகவலும் தருகிறது அழகிரி வட்டாரம்.

என்னதான் அழகிரி மீண்டும் தி.மு.க.வில் உள்நுழைய பகீரத முயற்சிகள் மேற்கொண்டாலும், ஸ்டாலின் அதற்கு கொஞ்சமும் அசைந்து கொடுக்கமாட்டார் என்கிறது ஸ்டாலினுக்கு நெருங்கிய வட்டாரம்.

அழகிரிக்கும், ஸ்டாலினுக்குமான இந்த சண்டை ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு தென்மாவட்டங்களில் தேர்தல் லாபம் தரக்கூடியது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *