சென்னை மேயர் வேட்பாளராக உதயநிதி ?

slider அரசியல்
உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க.வில் கலைஞருக்கு என்னதான் செல்வாக்கு இருந்தபோதும், அவர் மகன் ஸ்டாலினை கட்சிக்குள் ஒவ்வொரு கட்டமாக முன்னிலைப்படுத்த நீண்ட காலம் எடுத்துக் கொண்டார். இதற்கு அந்த கட்சி பேரறிஞர் அண்ணாவால் ஜனநாயக முறையிலான நிர்வாக அமைப்பு கொண்டதாக தி.மு.க. உருவாக்கப்பட்டதும் ஒரு காரணம். ஆனால். இப்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியை வேகவேகமாக கட்சிக்குள் கொண்டு வந்து, தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளர் பதவியும் வழங்கி விட்டார். மேலும், மக்கள் பிரதிநிதியாக தன் மகன் பதவி வகிக்க வேண்டும் என்கிற நோக்கில், விரைவில் வரவுள்ள சென்னை மாநகர மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் உதயநிதியை போட்டியிடச் செய்யவுள்ளார் என்கிற தகவல் இப்போது வெளியாகியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

கலைஞர் காலத்திலே கட்சிக்குள் ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதை எதிர்த்து வந்தனர் ஒரு சிலர். அப்படி எதிர்த்தவர்கள் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து, தி.மு.க.வை விட்டு பிரிந்து வைகோ தலைமையில் ம.தி.மு.க. என்ற தனிக் கட்சியை தொடங்கினார்கள் என்பது மறக்க முடியாத வரலாறு.

ஆனால், ஸ்டாலின் மகன் உதயநிதி கதையோ வேறு.  இவர் தன் தந்தையைப் போல், படிப்படியாக முன்னுக்கு  கொண்டுவரப்படாமல் தடாலடியாக கொண்டுவரப்படுகிறார் என்பதற்கு இப்போது தி.மு.க.வின் இளைஞரணி பொறுப்பில் நேரிடையாக கொண்டுவரப்பட்டுள்ளதே உதாரணம். ஆனால், முன்பு கலைஞரால் ஸ்டாலின் கொண்டுவரப்பட்டது போல், தி.மு.க.வுக்குள் உதயநிதியின் இந்த தடாலடி உயர்வு குறித்து ஏதேனும் சலசலப்போ, மனக்குமறலோ இருப்பதாக இதுவரை வெளி தெரியவில்லை. ஒருவேளை இனிவரும் காலங்களில் தெரிய வரலாம்.

அடுத்து தமிழக அரசால் சொல்லப்பட்டுள்ள செப்டம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தபட்டால், சென்னை மாநகர மேயர் வேட்பாளராக  உதயநிதி அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாம். உதயநிதியின் வெற்றிக்காக இளைஞரணியை தயார்படுத்தும் வேலைகளும் ரகசிய உத்தரவு மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளதாம். இந்த பதவிக்கு உதயநிதி கொண்டுவரப்பட்டு அதிலிருந்து சில வருடங்களிலே கட்சியில் பெரிய பொறுப்பும், ஒருவேளை அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் முதல்வராகவும், துணை முதல்வராக உதயநிதியை கொண்டுவரும் திட்டங்களும் ஸ்டாலின் குடும்பத்தில் உள்ளதாகவும் அறிவாலய வட்டார தகவல் சொல்கிறது.

இப்படி ஒருவேளை நடக்குமாயின் தி.மு.க.வை குடும்பக் கட்சி என்று அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட சில கட்சிகள் சொல்லி வருவது மேலும் வலுவாகும். இது தி.மு.க.வை ஆதரிக்கும் வாக்காளர்கள் மற்றும் அனுதாபிகள் மத்தியில் அக் கட்சிக்கான செல்வாக்கை குறைத்திடவும் செய்யலாம். அப்படி நடக்குமாயின் தி.மு.க. பெரும் சறுக்கலை தேர்தல் வழியாக எதிர்கொள்ள நேரலாம் என்பது இப்போதை அரசியல் சூழலை வைத்து பேசப்படுகிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *