சசிதரூருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கேரள காங்கிரஸ்

slider அரசியல்

 

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவராக இருப்பவர் சசி தரூர்.  இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது எம்.பியாகவும் உள்ளார். தேசிய அளவில் காங்கிரஸின் முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர்.   சமீபத்தில் சசிதரூர் பிரதமர்  மோடிக்கு ஆதரவாக பேசிய பேச்சினால், கேரள காங்கிரஸ் தலைவர்கள் இவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், “பிரதமர் மோடியின் ஆட்சியில் சில நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. அவரின் ஆட்சியை முழுக்க முழுக்க மோசமான ஆட்சி என்று கூறி விட முடியாது’’ என்று  பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷின் இந்த கருத்து காங்கிரஸில் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிகூட, இதற்காக ஜெய்ராம் ரமேஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷுக்கு ஆதரவாக பேசிய சசி தரூர், “ஜெய்ராம் ரமேஷ் சொன்னதை நான் ஆதரிக்கிறேன். ஒருவர் நல்லது செய்யும் போது நாம் அதை பாராட்ட வேண்டும். மோடி நல்லது செய்தால் அதை நாம் பாராட்ட வேண்டும். அப்போதுதான் நாம் பேசுவதற்கு மதிப்பு இருக்கும். நாம் பேசுவது உண்மைதான் என்று மக்களுக்கு புரியும். நாம் விமர்சனம் செய்வதை அப்போதுதான் மக்கள் மதிப்பார்கள்” என்று  பேசவே,  இதற்குத்தான் தற்போது கேரள காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  கிட்டத்தட்ட கேரளா காங்கிரசில் உள்ள 90% சதவிகித தலைவர்கள் சசி தரூருக்கு எதிராக தற்போது பேசி வருகின்றனர்.

எதிர்ப்புகளில் காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மூத்த தலைவர் முரளிதரன் ஆகியோர் அடங்குவர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தேசிய தலைவர் சோனியா காந்தியிடம் போன் செய்து புகாரும் அளித்துள்ளாராம்.   மேலும், இது குறித்து சசி தரூர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு கேரள காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறதாம்.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், சசிதரூர் பா.ஜ.க. பக்கம் செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

விசாகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *