குழப்பத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா

slider அரசியல்
கோகுல இந்திரா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கோகுல இந்திரா மந்திரியாக பதவி வகித்தார். அதுமட்டுமல்ல மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்தார். மேலும், செல்வி ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்தவர்.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில், இதுவரையிலும்  கோகுல இந்திராவுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால், அவர் பெரும் வருத்தத்தில் இருப்பதாகவும், விரைவில் அவர் அ.தி.மு.க.வைவிட்டு விலகி வேறு கட்சிகளுக்கு செல்லலாம் என்கிற தகவலும் சமீபத்தில் பரவ ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றுப் போனார். இதன்பிறகு செல்வி ஜெயலலிதா மறைவு மற்றும் கட்சியில் பிளவு போன்ற நிகழ்வுகள் நடந்தன. ஒருவழியாக அ.தி.மு.க. என்னும் கட்சி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வலுப்பட்டு, ஆட்சியும் நிம்மதியாக செல்லத் தொடங்கிவிட்டது.

இதில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 22 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் எதிர்பார்த்து காத்திருந்தார் கோகுல இந்திரா. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்து மாநிலங்களவை எம்.பி. பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதையெல்லாம் வைத்து இனி அ.தி.மு.க.வில் நமக்கு எதிர்காலம் இல்லை என்கிற முடிவுக்கு கோகுல இந்திரா வந்துள்ளாராம். ஆகவே, சமீபமாக, கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க ஆரம்பித்து விட்டாராம். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பக்கம் மட்டும் அல்லாமல் தலைமைச் செயலகம் பக்கமும் அவரை இப்போது காண முடியவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் வளர்மதி எங்கு இருந்தாலும் அங்கு கோகுல இந்திராவை பார்க்க முடியும். ஆனால், வளர்மதியைக் கூட கோகுல இந்திரா தற்போது பார்க்கச் செல்லவில்லை என்றும், முக்கியமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்ற நிலையில் அவரை அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் ஒருவர் விடாமல் அனைவரும் சென்று சந்தித்தனர். சிலர் ஏர்போர்ட்டுக்கே சென்று வழி அனுப்பினர். ஆனால், கோகுல இந்திரா செல்லவில்லை என்றும் சொல்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

இந்நிலையில் கோகுல இந்திராவுக்கு பா.ஜ.க. வலை விரிப்பதாகவும், அதே சமயம் தி.மு.க.விற்கு சென்றால் எப்படி இருக்கும் என்று கோகுல இந்திரா தனது ஆதரவாளர்களிடம் பேசியதாகவும், சிவகங்கையில் பெரிய கருப்பனை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. ஆனால் மத்திய சென்னையில் தயாநிதிமாறனுடன் இணக்கமாகிவிடலாம் என்று சிலர் கோகுல இந்திராவுக்கு ஆசையை தூண்டியுள்ளனர் என்றும் தகவலும் கசியத் தொடங்கியிருக்கிறது.

அனேகமாக கோகுல இந்திரா தி.மு.க. அல்லது பா.ஜ.க.வில் இணைந்தார் என்கிற பிரேக்கிங் நியூஸ் விரைவில் வரலாம். இதுபற்றி ஊடகங்களில் விவாதங்களும் நடக்கலாம்.

 

தொ.ரா.ஸ்ரீ.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *