கலக்கத்தில் தினகரன் – காரணம் என்ன?

slider அரசியல்
DINAKARAN
TTV DINAKARAN

 

அ.ம.மு.க. கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்த தோல்வியினால் அந்தக் கட்சியின் தளபதியாக செயல்பட்டுவந்த தங்க. தமிழ்செல்வன் தி.மு.க.வுக்கு தாவினார். இதேபோல் முன்னாள் அமைச்சரான இசக்கி சுப்பையா மீண்டும் அ.தி.மு.க.வுக்கே சென்றுவிட்டார். இப்படி செல்வாக்கு பெற்றவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில், “தொண்டர்கள் தான் முக்கியம். தொண்டர்கள் இப்போதும் எங்கள் பக்கம்தான்” என்று கூறி சமாளித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சில வாரங்கள் வரை அதிகமாக தென்படாத டி.டி.வி. தினகரன் பின்னர் கட்சிக்காரர்களின் கல்யாணங்கள், மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் என்று தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வர ஆரம்பித்து மீண்டும் பழைய நிலையில் செயல்பட ஆயத்தமாகி வருகிறார். இதன் நடுவில் தன் கட்சிக்காரர்களுக்கு ஒரு கட்டளையும் போட்டார். அது என்னவென்றால், அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வினரின் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள கூடாதது என்பதுதான் அந்த அதிரடி கட்டளை.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம் என்று கூறினார். இதையெல்லாம் கவனித்த அரசியல் நோக்கர்கள், டி.டி.வி. தினகரன் மீண்டும் முன்புபோல் அரசியல் களத்தில் அதிரடி செய்ய ஆரம்பமாகி வருகிறார் என்று கூறினார்கள்.

அ.ம.மு.க.வை பொறுத்தவரை தங்க,.தமிழ்செல்வன், இசக்கி சுப்பையா போன்ற முக்கிய நிர்வாகிகள் சென்றபின்பு மீதமிருப்பவர்களில் கட்சிக்கு தூண் போன்று இருப்பவர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கர்நாடக புகழேந்தி, வெற்றிவேல் இவர்கள் மூவரையும் சொல்லலாம்.   இதில் தினகரனின் வலதுகரம் போன்றவர் தருமபுரி பழனியப்பன். இவரது வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது.  இந்த நிகழ்ச்சிக்காக அந்த மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. என இரு முக்கிய கட்சியின் மிக முக்கிய தலைகளுக்கும் பத்திரிகை வைக்கப்படுகிறதாம்.  இது குறித்து தினகரனின் காதுக்கும் சென்றதாம்.  இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் அவர் விசாரித்தபோது ‘பழனி இரண்டு கட்சிகளுக்கும் ரூட் போடுறார். ஏதோ ஓண்ணுல சேரலாம்.’ என்றார்களாம்.

டி.டி.வி. தினகரன் இதுபற்றி பழனியப்பனிடமே கேட்டபோது “அரசியல் வேறு, பர்சனல் வேறு தானே தலைவரே. நான் மாற்றுக் கட்சியில் இருந்தாலும் சொந்த பந்தங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துறதுதானே குடும்பத்துக்கு அழகு” என்று பொத்தாம் பொதுவாக பதில் தந்தாராம். ஏற்கெனவே அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் திருமணம் போன்ற அ.தி.மு.க.வினரின் நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என்று தான் அறிவித்துள்ள நிலையில், அதுபற்றி நன்கு அறிந்த பழனியப்பன், இப்படி செய்கிறார் என்றால், அவர் நம்மைவிட்டு விலக முடிவு செய்துவிட்டார் என்கிற எண்ணத்துக்கு வந்துவிட்டாராம் தினகரன்.

அனேகமாக திருமணம் முடிந்த கையோடு பழனியப்பன் தி.மு.க.வுக்கு செல்வதற்கு அதிக வாய்ப்பும், அ.தி.மு.க.வுக்கு செல்வதற்கு குறைந்த வாய்ப்பும் இருப்பதாக சொல்கிறார்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள்.  பழனியப்பன் கட்சி மாறினாலும், “அ.ம.மு.க.வைப் பொறுத்தவரை தொண்டர்கள் தான் முக்கியம். தொண்டர்கள் இப்போதும் எங்கள் பக்கம்தான்” என்பதாகத்தான் இருக்கப் போகிறது. ஆனாலும் டி.டி.வி. தினகரனை இந்த தொடர் வெளியேற்றங்கள் கலக்கமடையவே செய்யும்.

  • தொ.ரா.ஸ்ரீ.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *