எதிர்க் கட்சிகளை விமர்சித்த மாயாவதி – உற்சாகத்தில் பா.ஜ.க

slider அரசியல்
mayawati

 

கடந்த 24-ம் தேதி அன்று ராகுல் காந்தியும்,  எதிர்க்கட்சியினரும் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது மத்திய அரசு அரசியல் செய்ய வழி வகை செய்வதற்கு சந்தர்ப்பத்தை கொடுத்துவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கோ மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதற்கும், அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் ஒருமுறை காஷ்மீர் முதல்வராகவும் இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு குலாம் நபி ஆசாத் காஷ்மீர் பயணம் மேற்கொண்ட போது, அவர் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவமும் நடந்தது.

மீண்டும் நேற்று முன் தினம் அதாவது கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி  ராகுல் காந்தி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டனர். இந்த குழுவில் குலாம் நபி ஆசாத், திருச்சி சிவா, டி ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை காஷ்மீர் நிர்வாக அரசு, விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பியது. அவர்களால் சட்டம் ஒழுங்கு பாதித்து அமைதிக்கு குந்தகம் விளையும் என விளக்கம் கொடுத்தது மத்திய அரசு.

இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில்,  “இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக அம்பேத்கர் இருந்ததால்தான் ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவுக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால்தான் பி.எஸ்.பி. கட்சி சார்பில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். ஆனாலும் 69 ஆண்டுகளாக 370 சட்டப்பிரிவு அமலில் இருந்ததால், தற்போது அது நீக்கம் என்றவுடன் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப கொஞ்சம் நாள் ஆகும்.  நிலைமை இப்படி இருக்க, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காஷ்மீருக்கு பயணம் செய்திருக்கக் கூடாது. இதை வைத்து பா.ஜ.க. அரசு அரசியல் செய்ய இவர்கள் சந்தர்ப்பம் கொடுத்துவிட்டனர்’’ என்று கூறியுள்ளார் மாயாவதி.

தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சியான பி.எஸ்.பி. கட்சியே  ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவும், இதில் எதிர்க் கட்சிகளின் நடவடிக்கையை குறை கூறியும் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக பா.ஜ.க.வுக்கு வலு கொடுப்பதாக அமைய அதிக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

குருபரன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *