அனுமார் வால்போல நீளும் ப.சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு

slider அரசியல்
கைதின் போது ப.சிதம்பரம்

 

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்நிலையில், ஐந்து நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 26-ம் தேதி) முடிவடைந்த நிலையில் மீண்டும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க அதே சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இந்த தகவல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் சி.பி.ஐ.யின் விசாரணை பிடியில் இருந்துவரும் சிதம்பரத்துக்கு, இன்னொரு பக்கம் அமலாக்கத்துறையும் இதே வழக்கில் கைது செய்து விசாரணை செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கான முயற்சிகளையும் அமலாக்கத்துறை ஏற்கனவே துவங்கி விட்டது. இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டில், தனது கைது சட்ட விரோதம் என்று கூறி சிதம்பரம் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஒரு முன் ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு அமலாக்க துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அபிடவிட் இன்று (ஆகஸ்ட் 26-ம் தேதி)  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அபிடவிட்டில் சிதம்பரம் வெளிநாடுகளில் வாங்கிய சொத்துக்கள் பட்டியலையும் அமலாக்கத்துறை இணைத்து தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக, ப.சிதம்பரத்துக்கு அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மோனாக்கா, சிங்கப்பூர், தென்ஆப்ரிக்கா, ஸ்பெயின், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் சொத்து உள்ளது எனவும், இதற்கான வருவாய் குறித்து முறையான கணக்கு காட்டபடவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்தமுறை 4 நாள் விசாரணை காவலில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தெரிவித்துள்ள இந்த சொத்துக்கள் குறித்தும் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. மேலும், இந்த வழக்கில் அப்ரூவராகி மும்பையில் சிறையில் இருந்துவரும் இந்திராணி முகர்ஜியிடம் ப.சிதம்பரத்தை அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளும் புது முடிவிற்கு சி.பி.ஐ. திட்டமிட்டிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கும், கைதும் போகிற போக்கு, சி.பி.ஐ. பிடியில் சிக்கியுள்ள ப.சிதம்பரம் இதிலிருந்து அவ்வளவு சுலபத்தில் விடபட முடியாது என்பதாக நகர்வதையே அனுமானம் செய்திட வைக்கிறது.

விசாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *