முத்தலாக் தடை சட்டம் – தடுமாற்றத்தில் சட்டத்துறை

slider அரசியல்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக தொடர்ந்து பதவியில் அமர்ந்தவுடன் இஸ்லாமிய ஆண்கள், தங்களது மனைவிகளை, மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதித்து  சமீபத்தில் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டம் நடைமுறைக்கும் வந்துவிட்டது.  தற்போது இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம்,  இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜாமியத் உலாமா – ஐ – ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பே உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் இந்த வழக்கை தொடுத்திருக்கிறது. இவர்களுடன் சேர்ந்து மேலும் இரண்டு அமைப்புகளும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மூன்று மனுக்களும் முத்தலாக் தடை சட்ட மசோதா 2019 என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி தாக்கல் செய்திருக்கின்றன.

இந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 23-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள இந்த நோட்டீஸ் மூலம் ஒரு சட்ட நெருக்கடியை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டிய சங்கடம் நேர்ந்திருக்கிறது. உதாரணமாக, இந்தியாவில் இன்றோ அல்லது இதன்பிறகு முத்தலாக் மீதான வழக்கை எப்படி பதிவு செய்வது என்பதில் தொடங்கி அதன் மீது எந்த வகையில் விசாரணை நடத்துவது என்றும், ஒருவேளை குற்றம் நிரூபணமானால், குற்றவாளியைத் தண்டிக்கும் வகையிலான தன்மை குறித்து காவல்துறை, நீதித்துறை  இரண்டுக்கும் என்ன செய்வது என்ற தடுமாற்றத்தை தரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எனவே, இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் ஒரு தீர்ப்பை வழங்கினால் அதன்படி செயல்பட சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்புகளுக்கு வசதி ஏற்படும்.

  • நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *