நளினிக்கு மேலும் மூன்று வார காலம் பரோல் நீட்டிப்பு – சென்னை ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கும் தமிழ் அமைப்புகள்!

slider அரசியல்
நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் கைதியாக சிறையில் இருந்த நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடையொட்டி, இப்போது ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து வேலூர் அருகே சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார். ஆனால், இந்த ஒரு மாத பரோல் தன் மகளின் திருமண ஏற்பாட்டிற்கு போதாது என்றும், மேற்கொண்டு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கச் சொல்லி கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக அரசுக்கு செய்திருந்த மனுவை ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக அரசு நிராகரித்திருந்தது.

இதனையடுத்து தனது ஒரு மாத பரோல் நீட்டிப்பு கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திடம் கொண்டு சென்றார் நளினி. அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் முடியவில்லை என்றும் செப்டம்பர் முதல் வாரம் இலங்கை மற்றும் லண்டனில் வசிக்கும் தனது உறவினர்கள் வருகை தர இருப்பதால் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி அளித்த மனுவை தமிழக அரசு கடந்த 13ம் தேதி நிராகரித்து உள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து தனது பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 22-ம் தேதி) நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட பழைய நிபந்தனைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி மேலும் மூன்று வார காலம் பரோலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் நளினிக்கு மேலும் மூன்று வார காலம் பரோல் நீட்டிப்பு வழங்கியதை தமிழ் அமைப்புகள் பலவும் வரவேற்றுள்ளன.

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *