அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க.வை வெளியேற்றுமா எட்டு வழிச் சாலை?

slider அரசியல்

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முனைப்புடன் முன்னெடுக்கப்படும் திட்டம்தான் சேலம் to சென்னை 8 வழி சாலைத் திட்டம். இது சென்ற பா.ஜ.க. ஆட்சியால் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலமாக ஏராளமான மக்கள் பயன் பெறுவார்கள் என்று முதல்வரும், பா.ஜ.க. தலைவர்களும் சொல்லி வருகிறார்கள். அதே நேரத்தில், இந்தத் திட்டம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி நிறைவேற்றப்படுவதால், தமிழக விவசாய நலன்களுக்கு எதிரானது என்று கூறி, இத் திட்டத்தை தமிழ் நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன.

இதில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் பா.ம.க. எம்.பி. அன்புமணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சேலம் 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக மத்திய நெடுஞ்சாலை துறை இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட் 22-ம் தேதி) நடைபெற்றது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில், “சென்னை டூ சேலம் இடையே எதற்காக  எட்டு வழி சாலை போடப்படுகிறது. சேலம் டூ சென்னை எட்டு வழிச் சாலை திட்டமே குழப்பமாக இருக்கிறது.  எட்டு வழி சாலைக்காக விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா? திட்டம் இருக்கிறது என்றால் அதை சமர்ப்பியுங்கள். சாலைக்காக எதன் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? இல்லையென்றால் ஏன் சாலை போட இத்தனை அவசரம். சேலம் டூ சென்னை  எட்டு வழி சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் கால தாமதம் ஆனால் என்ன செய்வீர்கள்? சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டத்தை தொடங்கி விடுவீர்களா? பாரத் மாலா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் உள்ளதா?. அப்படி பாரத் மாலா திட்டம் என்றால் அதற்கான அறிவிப்பாணை எங்கே?” என்று நீதிமன்றம் பல கேள்விகள் எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தியும் வைத்ததுள்ளது.

பொதுவாக, நமது நாட்டின் அரசியல் சூழல்படி, ஆளும் கட்சி கொண்டுவரும் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியவில்லையென்றால், அதை அரசின் தோல்வியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அரசியல் தோல்வியாகவும் எடுத்துக் கொள்வதும், மதிப்பிடப்படுவதும்தான் ரொம்ப காலம் நம் நாட்டில் இருந்து வரும் பழக்கம். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள பல கேள்விகளும், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளதையும் கணக்கிட்டால், அனேகமாக இந்த திட்டத்தை நிறுத்தச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடவே அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒன்று நடக்குமாயின் அது அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் தமிழகளவில் பெரும் பின்னடைவாக கருதப்பட வாய்ப்பிருக்கிறது. இதில் இன்னொன்றையும் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட அன்புமணி இப்போது அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். இவர்கள் மத்தியில் இதனால் விரிசலும் ஏற்படலாம். அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறவும் நேரலாம்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *