மிரட்டும் சீனா – கண்காணிக்கும் அமெரிக்கா

slider அரசியல்
ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுயாட்சி போன்ற பல்வேறு சலுகைகள் அதற்கு இருக்கின்றன என்றாலும், கடந்த இரண்டு மாதங்களாகவே சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் ஜனநாயக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பொது மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு கிடைத்து வருவதால், சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போராட்டத்தின் ஆரம்பம் என்பது ஹாங்காங் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்தின்பேரில் ஏற்பட்டது. அதாவது இதுவரை ஹாங்காங்கில் சாதாரண குற்றம் புரிந்தவரிலிருந்து கடும் குற்றம் புரிபவர் வரைக்குமான தண்டனை என்பது ஹாங்காங் நிர்வாகச் சட்டப்படியே வழங்கப்பட்டு வந்தது. இந் நிலையில், சமீபத்தில் அதில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டு, ஹாங்காங்கில் கடும் தண்டனை புரியும் கைதிகளை சீனாவின் பார்வைக்கு கொண்டு செல்வது என்றும், ஏறக்குறைய சீனாவுக்கு நாடு கடத்தி அங்கு தண்டனை என்னவென்று முடிவு செய்யப்படும் என்கிற வகையில் அந்த சீர்திருத்தம் இருந்ததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் இறங்கி போராட ஆரம்பித்தார்கள் ஹாங்காங் ஜனநாயக கிளர்ச்சியாளர்கள். இந்தப் போராட்டம் உடனடியாக மக்களிடையே செல்வாக்கையும் பெற்றதால், ஹாங்காங்கே ஸ்தம்பித்தது. இதனைக் கண்ட ஹாங்காங் நிர்வாக தலைவர் இப்படியொரு சீர்த்திருத்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இது கிளர்ச்சியாளர்களை பெரியளவில் சமாதானப்படுத்தவில்லை. அந்த சீர்திருத்தத்தை நிரந்தமாக கைவிட வேண்டுமென்றும், இந்த போராட்டங்களின்போது கைதானவர்களை விடுதலை செய்யவேண்டுமென்றும், சீனாவின் ஹாங்காங் தலையீட்டை கண்டித்தும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டங்களால் சீனா ரொம்பவே கோபம் அடைந்துள்ளது. ஆகவே, ஹாங்காங் போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக கடந்த வாரம் சீனாவின் அரசு நாளிதழில் தியான்மென் சம்பவத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு “அதை மீண்டும் செய்யவைத்து விடாதீர்கள். சீனா அப்போது இருந்ததை விட பலமாகவும், முதிர்ச்சியுடனும் இருக்கிறது. சிக்கலான சூழ்நிலைகளை நிர்வகிக்கும் திறன் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது” என செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்விடத்தில் தியான்மென் சம்பவம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.   சீனாவில் கடந்த 1989-ம் ஆண்டு ஜனநாயக ஆட்சிக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சீன பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய போராட்டம் ஜூன் மாதம் வரை நீடித்தது. அப்போதைய சீன அரசு இந்தப் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. ஜூன் மாதம் 4-ந்தேதி தியான்மென் சதுக்கத்தில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அதன் பின்னர் குருவியை சுடுவது போல் போராட்டக்காரர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தினர். சீன ராணுவம் நிகழ்த்திய இந்த படுகொலையில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. தியான்மென் சம்பவம் இன்றும் சீன மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.

சீனா, ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கைக்கு  உடனடியாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருக்கிறது. நியூஜெர்சி மாகாணத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ஹாங்காங் போராட்டத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டிரம்ப், “அவர்கள் (சீனா) வன்முறை செய்தால் அதை சமாளிப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். அதாவது, அது மற்றொரு தியான்மென் படுகொலையாக மாறும். சீனா அதை செய்ய முற்பட்டால் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை பாதிப்படையும். இந்தப் பிரச்சினைக்கான தீர்வுக்கு மனிதாபிமான ரீதியில் செயல்படுவதைக் காண நான் விரும்புகிறேன். அத்துடன் அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜின்பிங்குக்கு நான் அழைப்பு விடுக்கிறேன் ’’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் உள் நுழைந்திருப்பதால், இனி இது சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் ஒன்றாகவும், இது சீனாவுக்கு நெருக்கடியாக மாறவும் அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது.

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *