புதிய ராணுவ தளபதியாக போர்க் குற்றவாளியா?  –  எதிர்ப்பு தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர்

slider அரசியல்

 

இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான பரபரப்புக்கு மத்தியில் இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளது உலகளவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல அப்பாவி தமிழர்களையும் ஈவு இரக்கமின்றி கொன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர் தான்  சவேந்திர சில்வா. இவர் மீது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் போர்க் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இவர் இந்த இறுதிப் போரில் நிகழ்த்திய  போர்க் குற்றங்கள் குறித்து மனித உரிமை ஆணையம் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. இப்படி மனித உரிமை ஆணைய அறிக்கையில் போர்க் குற்றவாளியாக சொல்லப்பட்ட நபரைத்தான் புதிய ராணுவ தளபதியாக இலங்கை அதிபர் மைத்திரி சிறிசேன நியமித்திருக்கிறார்.

இதற்கான முதல் எதிர்ப்புக் குரல், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ்ஸிடமிருந்து வந்திருக்கிறது. இவர் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை இலங்கை ராணுவ தளபதியாக நியமித்துள்ளதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் அடுத்தகட்டமாக, நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா கட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஜாரிக்,  ’’ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சவேந்திர சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது அவரையே ராணுவ தளபதியாக நியமித்திருப்பது குறித்து கவலையை தெரிவிக்கிறோம். ஐ.நா.வின் அமைதிப் பணிகளில் ஈடுபடும் அனைத்து இலங்கை ராணுவத்தினரும் மனித உரிமைகள் பரிசோதனைக்குள்ளாக்கப்படுவார்கள்’’ என்றார்.  இதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதிற்கு ஐ.நா.வும், மனித உரிமை ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், ஐ.நா. அமைதி பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினர் பரிசோதனைக்குள்ளாக்கபடுவார்கள் என்கிற தகவல் இலங்கைக்கு இனிவரும் காலங்களில் பல்வேறு சர்வதேச நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *