முப்படைகளுக்கும் ஒரே தளபதி – யார் அந்த முதல் தளபதி?

slider அரசியல்

இந்தியா சுதந்திரம் பெற்று இந்த வருடத்தோடு 73 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இந்தியாவின் முப்படைகளுக்கும் மூன்று தளபதிகள் என்பதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையில் ஒரு மாற்றம் புதிதாக கொண்டுவரப்படும் என்றும், தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி நியமிக்கப்படுவார் என்றும் பிரதமர் மோடி, சில தினங்களுக்கு ஆற்றிய சுதந்திர உரையின்போது தெரிவித்தார். அப்போது இது பலரின் புருவத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இப்போது இது குறித்து மேலும் சில தகவல்களும் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால்,  முப்படைகளுக்கும் பொருத்தமான இந்த தலைமைப் பொறுப்புக்கு தளபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த உயர் மட்டத்தில் ஆலோசனை தொடங்கியிருக்கிறது. இதற்கென சிறப்பு அமலாக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதன் முடிவே இறுதியாக செயல்படுத்தப்படும் என்ற போதிலும் அனுபவம், திறமை அடிப்படையில் தற்போதைய ராணுவ  தலைமை தளபதி ஜெனரல் பிவின் ரவாத் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்  என தெரிகிறது.

தலைமை தளபதி ஜெனரல் பிவின் ரவாத் இப்போதைய பொறுப்பில் இருந்து டிசம்பர் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதற்குள்ளாகவே தளபதி ரவாத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த புது நியமனம் பற்றிய அறிவிப்பு நவம்பரில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முப்படைகளுக்கும் உள்ள தனித்தனி தளபதிகள், 4 நட்சத்திர அந்தஸ்தில் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார்கள். இந்த முப்படைகளுக்கும் தலைமை வகிக்கப்போகும் இவருக்கு 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டு தலைமைத் தளபதியாக இருப்பார் எனவும் தெரிகிறது.

தலைமைத் தளபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் முப்படைகளுக்கும் சேர்த்து திட்டமிடுதல், தளவாடங்கள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றை கவனிப்பது மட்டுமின்றி ராணுவ அமைச்சரின் ஒரே ஆலோசகராகவும் செயல்படுவார்.  முப்படைகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் இது அவசியம் என்று பிரதமர் மோடியின்  திட்டப்படியே இந்த நடவடிக்கை என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிமலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *