தனது அமைப்பை அ.தி.மு.க.வுடன் இணைத்தார் தீபா – பின்ணணியில் பா.ஜ.க?

slider அரசியல்
ஜெ.தீபா

 

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்தது. இதில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் மூன்றாவது பிரிவாக 2017-ஆம் ஆண்டு  ‘எம்.ஜி.ஆ.ர் அம்மா தீபா பேரவை’ என்ற அரசியல் அமைப்பைத் தொடங்கினார். இவர் தோற்றத்தில் ஜெயலலிதாவைப் போன்றே இருப்பதால் இவரது கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர்.  ஆனால், சீக்கிரத்திலே கட்சியில் இணைய விண்ணப்பப் படிவத்துக்கு பணம் வாங்கி மோசடி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கட்சியின் கொள்கை, செயல்பாடுகள் குறித்து தீபா எங்கும் விளக்கியதில்லை. இதனால் முக்கிய நிர்வாகிகள் பலரும் இவரைவிட்டு வேறு கட்சிகளுக்குச் சென்றனர்.  சமீபத்தில்கூட சில தினங்களுக்கு முன்பு, “நான் அரசியலை விட்டு விலகுகிறேன்” என்று கூறியவர், இன்று ( ஆகஸ்ட் 19-ம் தேதி) மீண்டும் தடாலடியாக, “எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அ.தி.மு.க.வுடன் இணையும்” என்று கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் அரசியல் அமைப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை மக்களுக்காக இறங்கி போராடியவற்றை விரல் விட்டு எண்ணிவிடலாம். கணவருடனான பிரச்சினை, சகோதரனுடனான பிரச்சினை, கட்சி நிர்வாகிகளுடனான பிரச்சினை, சொத்து பிரச்சினை என பிரச்சினை மேல் பிரச்சினை ஏற்பட்டதால் அவரால் கட்சியில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. இதை நிர்வாகிகளே வெளிப்படையாக தெரிவித்துவிட்டு மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர்.  மேலும், ஆர். கே. நகர் இடைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் தீபா. ஆனால் வேட்புமனுவில் ஏதோ தவறு இருந்ததைக் காரணம் காட்டிய தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்புமனுவை நிராகரித்தனர். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலிலாவது ஜெ. தீபா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவோ சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தனது ஆதரவு என அறிவித்தார்.  பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட தீபாவுக்கு அதிமுக ஏதேனும் வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தீபா திடீரென கடந்த மாதம் 30-ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டியிருந்தார். அதில் அரசியல் தனக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து விலகுகிறேன். தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்லை. கட்சியினர் கேட்பதால் அரசியலில் நீடிப்பதாக கூறினார்.  இதுபோல் மாறி மாறி தீபா பேசியதை எண்ணி தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் குழப்பமான நிலைக்கு சென்றனர்.

இப்படிபட்ட சூழ்நிலையில்,  தி.நகரில் உள்ள தனது வீட்டில்  இன்று (ஆகஸ்ட் 19-ம் தேதி) கணவர் மாதவனுடன் ஜெ.தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ‘’ நான் 2017-இல் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினேன். அதுபோல் எனது கணவரும் ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு என்னுடைய அமைப்புடன் இணைந்துவிட்டது. தற்போது எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் பணிகள் ஏதும் என்னால் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால்தான் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். ஆனால் தனக்குப்பின் அ.தி.மு.க. நிலைக்க வேண்டும் என்ற ஜெ.வின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். அதனால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அ.தி.மு.க.வுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் விருப்பத்தை அ.தி.மு.க.விடம் கூறியபோது இணைப்பு பணியை விரைந்து செய்யுமாறு கூறினர். எனவே நம் அமைப்பின் தொண்டர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.

இதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாகவும், அ.தி.மு.க.வின் பழைய வாக்கு வங்கியை எந்த நபரோ அல்லது அமைப்புகளோ பிரிப்பதை அது கொஞ்சமும் விரும்பவில்லை என்றும் டெல்லி பா.ஜ.க. திட்டமிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

விசாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *