முதல்வர் எடப்பாடியின் வெளிநாடு பயணம் – புது வியூகம் அமைக்கும் ஸ்டாலின்

slider அரசியல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் ஆகஸ்ட் 28-ம் முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பயணம் செய்து தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டுவருவதற்காக அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார். அவரது பயணம் என்பது தொழில் சம்பந்தமாக இருக்கிறது என்றால், அந்த பயணத்தின் 14 நாட்களுக்குள் இங்கே தமிழகத்தில் பெரியளவில் அதிரடி அரசியல் மாற்றத்துக்கான வேலைகளை நடத்திடும் திட்டங்கள் தி.மு.க. தரப்பிலிருந்து ரகசியமாக செய்யப்பட்டு வருவதாக கசிந்துள்ள தகவல்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வட்டாரத்தை மட்டுமல்ல, தமிழக அரசியல் வட்டாரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதிலிருந்தே இந்த  ஆட்சியைக் கவிழ்க்க கடந்த இரண்டு வருடமாகவே  முயன்று வருகிறார்.  இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலுவாக இருந்த சமயத்தில் ஸ்டாலினுக்கு ஆட்சியைக் கவிழ்ப்பதில் பெரிய அளவில் நம்பிக்கை இருந்தது. அதற்கேற்ற வகையில் தினகரன், “எங்களிடம் ஸ்லீப்பர் செல் இருக்கிறது. அவர்கள் சட்டசபையில் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அப்போது இந்த அரசு கவிழ்ந்துவிடும்” என்றெல்லாம் பரபரப்பூட்டி பேசிவந்தார். அவை மீடியாக்களில் பெரும் இடத்தை பிடித்தன.  டி.டி.வி.யின் இந்த பேச்சு தி.மு.க.வுக்கு ஏதோ ஒரு விகிதத்தில் மறைமுக உதவியாக அமையும். இதன் பின்னணியில் எடப்பாடி அரசை கவிழ்ப்பது சுலபம் என்று ஸ்டாலின் நம்பினார்.

. ஆனால்,  இவையாவும் கடந்த பாராளுமன்ற மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவோடு கலைந்துபோனது. தினகரன் வேலூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தே ஒதுங்கிக் கொண்டார். இதனால் வேலூர் தேர்தலில் பழைய மாதிரி கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு ஏற்பட்டது. இதிலும்கூட வெற்றி நூலிழையளவில் என்பதால் ஸ்டாலின் ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளானார். இனி தினகரனின் மறைமுக உதவிகள் குறித்து காத்துக் கொண்டிருக்காமல் நேரடியாகவே களத்தில் குதிக்க குறித்த நாள் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளியூர் பயண நாள்கள். இதில் நிச்சயம் ஒரு முடிவைத் தொட்டுவிட ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளாதாக சொல்கிறது அறிவாலய வட்டாரம்.

மேலும், இதற்கான வலையில் முதல் மீனாக மாட்டவுள்ளவர் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன். மணிகண்டன் தரப்பிலிருந்தும் இதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டதாம். இதுதவிர வட மாவட்டங்களிலுள்ள வன்னியர், தலித் சமுதாயத்திலுள்ள அதிருப்தி மனநிலையிலிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருதாம். இந்தப் பேச்சுவார்த்தையில் பணம், கட்சி பொறுப்பு இவற்றைத் தாண்டி பா.ஜ.க.வை பற்றி சொல்லியே கன்வின்ஷ் செய்ய்யப்படுகிறதாம். இதற்கு நல்ல ரியாக்‌ஷனும் இருக்கிறதாம். அப்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சியைவிட்டு வெளியேறி தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில், அ.தி.மு.க.வின் பா.ஜ.க. உறவை விமர்சித்தே வெளியேறுவார்கள். இது நடப்பது உறுதி என்றும் சொல்கிறார்கள்.

முதல்வரின் அயல்நாட்டுப் பயணத்தின்போது, ஆட்சி நிர்வாகத்தை அ.தி.மு.க.வை சேர்ந்த மூன்று முக்கிய அமைச்சர்கள் சேர்ந்து கவனிக்க இருக்கிறார்கள். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் ஆட்சி பொறுப்பை கவனிக்க இருக்கிறார்கள்.

ஏற்கெனவே ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த ரகசிய நடவடிக்கைகளினால் அ.தி.மு.க. முகாமில் நிறையவே கலக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *