உள்ளாட்சித் தேர்தலை நோக்கி மக்கள் நீதி மய்யம்

slider அரசியல்

மக்கள் நீதி மய்யம் வேலூர் பாராளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்குக் காரணமாக, அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக கட்சியை அமைப்பு ரீதியாக கட்டியெழுப்ப வேண்டியதிருக்கிறது என்று கட்சி சார்பில்  ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி அக்கட்சியின் முதல் நடவடிக்கை தொடங்கியிருக்கிறது. இன்று (ஆகஸ்ட் 14-ம் தேதி) அக்கட்சி புதிதாக 6 பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர் பதவி, பொருளாளர் பதவி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட எட்டு மண்டலங்களுக்கு மாநிலச் செயலாளர் பதவிகளை உருவாக்கி அறிவித்திருக்கிறது.

இப்படி அறிவிக்கப்பட்ட 6 பொதுச் செயலாளர்கள் பதவிக்கு மட்டும் யார் என்றும் அறிவித்துள்ளது. 1. ஆ.அருணாச்சலம் (பொதுச் செயலாளர் ஒருங்கிணைப்பு 2.   ஏ.ஜி.மௌர்யா , (இ.பி.எஸ். ஓய்வு) அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு) 3. தலைவர் அலுவலகம் நேரடி பொறுப்பு – தெற்கு மற்றும் மேற்கு – இதற்கு யாரும் நியமிக்கப்படவில்லை. 4. ஆர். ரங்கராஜன் , (ஐ.ஏ.எஸ். ஓய்வு)  கொள்கை பரப்பு. 5. வி.உமாதேவி, பி.எஸ்.சி. – சார்பு அணிகள் 6. பஷீர் அகமது (ஐ.ஏ.எஸ். ஓய்வு) ஆகியோரை அறிவித்துள்ளது.

மேற்கொண்டு உருவாக்கப்பட்ட இதரப் பதவிகளுக்கு இன்னும் யாரை நியமிக்கவில்லையாம். இப்போதைக்கு பதவி மட்டும் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ளதாம். விரைவில் தகுதியானவர்கள் இந்தப் பதவிகளில் அமர்த்தப்படுவார்கள் என்கிறது மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலக வட்டார தகவல்கள்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு விழுந்த 3.2 சதவீத ஓட்டுகளில் பெரும்பாலானவை புதிய வாக்க்காளர்கள் மத்தியில் இருந்துதான் கிடைத்திருக்கிறது. அப்படி பார்த்தால் இளம் வயது நிரம்பிய ஆண்களும், பெண்களும் வாக்களித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர  இந்தக் கட்சி ஆட்சியை நோக்கிய பயணம் அளவுக்கு தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு நடுவயது நிரம்பிய எல்லா தரப்பு மக்களின் ஆதரவைப் பெற வேண்டியது அவசியம். அவர்கள் மத்தியில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத ஒரு மாற்று சக்திக்கான வெற்றிடம் இருந்து வருகிறது. அதைக் கவருவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்காமல், இதுவரை தமிழகத்தில் எந்தக் கட்சியிலும் இல்லாத நிர்வாக அமைப்பு பதவிகளை உருவாக்கினால் மட்டும் போதாது. இது ஒருவேளை அவர்களை மிரளவும் செய்துவிடலாம். கமலுக்கு இவ்விடத்தில் நிதானமும், கவனமும் தேவை என்கிறார்கள் மூத்த அரசியல் நோக்கர்கள்.

மக்கள் நீதி மய்யம் புதுமைகளை நிர்வாக அமைப்பில் செய்வதிலே காலம் தாழ்த்தாமல், தமிழக மக்களின் உயிர் நாடி பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவும், போராடவும் களத்தில் குதித்து செயல்படத் தொடங்கினால் செல்வாக்கு இயல்பாக பெருக ஆரம்பித்துவிடும் என்பதும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *