அங்கீகாரம் இழக்கும் தே.மு.தி.க. –  என்ன செய்யப் போகிறார் கேப்டன்? 

slider அரசியல்

நடிகர் விஜயகாந்த் 2005 –ம் ஆண்டு தே.மு.தி.க.வை ஆரம்பித்தபோது அவரை மாற்று சக்தியாக கருதும் பெரும் கூட்டமே இருந்தது. விருத்தாசலம் தொகுதியில் அவர் மட்டும் வெற்றி பெற்று 2006-ல் சட்டமன்றம் சென்றார். ஆனால், அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து ஏறக்குறைய 28 தே.மு.தி.க. உறுப்பினர்களுடன் சட்டமன்றம் சென்றவர் அங்கே எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார். இந்த சட்டமன்ற காலம் முழுவதும் இன்றைய பிரதான எதிர்க் கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 23 உறுப்பினர்களுடன் மூன்றாவது கட்சியாக அமர்ந்திருந்த நிலையும் இருந்தது. இப்படி செல்வாக்கில் உயர்ந்து கொண்டிருந்த கட்சியான தே.மு.தி.க. கொஞ்ச காலமாக பின்னோக்கி சென்று கொண்டிருப்பது அந்த கட்சியின் தொண்டர்களை ரொம்பவே கவலை செய்துள்ளது.

கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது தே.மு.தி.க. இத்தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்விதான். வாக்கு சதவீதமும் 5.1 சதவீதமாக இறங்கிப் போனது. அதேபோல, 2016 நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, விஜயகாந்த்தை கூட்டணிக்குள் கொண்டு வர  ரொம்பவே முயற்சித்துறு பார்த்தார். ஆனால்,  ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற வலைக்குள் போய் சிக்கிக் கொண்டு, வாக்கு வங்கி மேலும் சரிந்து 2.39 ஆக இறங்கியது.

இப்போதைய 2019 பாராளுமன்றத் தேர்தலில் இன்னும் படுமோசமாகி விட்டது நிலைமை. பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க.,  கூட்டணியில் சேருவதற்கு முன்பு செய்த பிடிவாதங்கள், பந்தா, பேரம் உள்ளிட்டவை மக்களை முகம் சுளிக்க வைத்ததால், தே.மு.தி.க. வெறும் 2.19 சதவீத வாக்குகளுடன் படு மோசமான நிலைக்குப் போய் விட்டது தே.மு.தி.க.

மாநில கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால் குறைந்தது 6 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெற வேண்டும்.     அதனால், தே.மு.தி.க.வுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் பறிபோகும் நிலை கூட ஏற்பட வாய்ப்பிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

இதற்கெல்லாம் காரணம் பிரேமலதா, சுதீஷ் எடுத்த தவறான முடிவுகளே என தேமு.தி.க.வில் சமீபமாக சலசலப்பு அதிகமாகி வருகிறதாம். இது ஒருபுறமிருக்க, பாராளுமன்றத் தேர்தலிலே பா.ஜ.க. சப்போர்ட் செய்ததால்தான் அ.தி.மு.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. இப்போது அந்தக் கட்சி சார்பில் எந்தவித நடவடிக்கைகளும் பெரிய அளவில் இல்லாமல் இருப்பது மக்கள் மத்தியில் அந்தக் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிப்பதால், அ.தி.மு.க. வரும் உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வை  கூட்டணியிலிருந்து கழட்டிவிட முடிவு செய்துள்ளதாம். பா.ஜ.க. இந்தமுறை தே.மு.தி.க.வுக்காக பரிந்து பேசப் போவதில்லையாம். பா.ஜ.க.வை பொருத்தவரையில் தங்களுக்கு அதிக இடங்கள் வாங்குவதில் மட்டுமே அக் கட்சி முக்கிய குறிக்கோளாக இருக்குமாம். ஆகவே, இப்போதிருக்கும் கூட்டணியிலிருந்தும் தே.மு.தி.க. தனிமைப்படுத்தப்பட அதிக வாய்ப்பிருக்கிறதும் என்றும், அனேகமாக, உள்ளாட்சித் தேர்தல் முன்பாகவே தே.மு.தி.க.விலிருந்து பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு தாவலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியிலிருந்து, அக் கட்சியை என்ன செய்து கேப்டன் காப்பாற்ற போகிறாரோ?

 

எம்.டி.ஆர். ஸ்ரீதர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *