ரஜினியின் காஷ்மீர் பேச்சு – சிதம்பரம் மீது பாய்ந்த கராத்தே தியாகராஜன்!

slider அரசியல்

 

   சென்னையில் ஆகஸ்ட் 11-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.

அங்கு பேசிய ரஜினி, ‘’மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் (அமித் ஷா) அதைச் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை மிக அற்புதமாக இருந்தது. இப்போது அமித் ஷா யாரென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ணன் போன்றவர்கள்” என்றார்.

ரஜினியின் இந்தப் பேச்சு பெரும் அரசியல் விவாதப் பொருளாக தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களிலும் இதற்கான எதிரொலிப்புகள் இருந்து வருகின்றன. ரஜினியின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், “மோடியையும், அமித் ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜுனர் என்றும் ரஜினி சொல்கிறார். ஆனால், இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் கூறுகிறார். மோடியும், அமித் ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள், இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல. பலகோடி மக்களின் உரிமைகளைப் பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும். தயவுசெய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள்” என்று ரஜினியை சாடியிருந்தார் கே.எஸ். அழகிரி.

இந்த விமர்சனத்துக்கு ரஜினிகாந்த் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மகாபாரதத்தை முதலில் ரஜினி படிக்கட்டும் என்கிறார் கே.எஸ்.அழகிரி. காஷ்மீர் பிரச்னையில் மோடி-அமித் ஷாவை ரஜினி புகழ்ந்ததை ப.சிதம்பரமும், மு.க.ஸ்டாலினும் இதுவரை ஏன் எதுவும் சொல்லமாட்டேன்கிறார்கள்? அவர்களை பேசச் சொல்வாரா அழகிரி” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்று கருதப்படும் கராத்தே தியாகராஜனிடமிருந்து ப.சிதம்பரம் குறித்து இப்படி ஒரு ட்வீட் வந்தது குறித்து அவரிடம் மீடியா கேட்டபோது, பதிலளித்த கராத்தே தியாகராஜன், ‘’மகாபாரத்தை படிங்கன்னு அழகிரி கேள்வி கேட்கிறார். அன்று ஒரு மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் ரஜினிகாந்த் பேசுகிறார். 2 கிலோ மீட்டர் தூரத்தில் மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுகிறார். அப்போது ரஜினி பேசியது குறித்து ஏன் அவர் பேசவில்லை. ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார். ரஜினி பேசியது தவறு என்று அழகிரி, ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் பேசுகிறார்கள். ஸ்டாலின் ஏன் பேசாமல் இருக்கிறார். இந்த விவகாரத்தில் ஸ்டாலினும், சிதம்பரமும் கருத்து சொல்ல வேண்டுமல்லவா? காங்கிரஸில் இரண்டு கருத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புபனேஸ்வர் கலித்தா உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துதானே பேசுகிறார்கள். இதைப் பற்றி அழகிரி சொல்ல வேண்டியதுதானே? அண்ணாமலை சைக்கிள் சின்னத்தைப் போட்டுதானே அழகிரி எம்.எல்.ஏ ஆனார். இல்லேன்னு அவரை சொல்லச்சொல்லுங்க பார்க்கலாம்” என்றவரிடம்,  ’ரஜினியின் பேச்சு குறித்து கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளாரே?’ என்று கேட்கப்பட்டபோது, “அவருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சிதம்பரம் ஏன் பேசவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி” என்று கூறியுள்ளார்.

ரஜினியின் காஷ்மீர் பேச்சு என்னும் புயல் தமிழக காங்கிரஸில் பிளவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை!

விசாகன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *