மீண்டும் ஜெ.தீபாவின் ஆடியோ…! சூடுபிடிக்கும் சர்ச்சை

slider அரசியல்

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, “எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை” என்று  ஒரு கட்சியை ஆரம்பித்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால், அவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகள், விமர்சனங்கள் வெளிவந்தன. தனிப்பட்ட முறையில் அவர்மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இடையில் சில காலம் அவர் பற்றிய பேச்சுக்கள் மீடியாவில் வராமல் இருந்தது. இந்நிலையில் இப்போது “எனக்கும், என் கணவர் உயிருக்கும் முன்னாள் கார் டிரைவர் ராஜாவால் ஆபத்து” என்று அவர் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்புதான் ஊடகத்திடம் அரசியலுக்கே முழுக்கு போடுவதாக ஜெ.தீபா தெரிவித்திருந்தார். மேலும் அந்தப் பேட்டியில் ”தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். மீறி தொந்தரவு செய்தால் போலீஸுக்கு போய்விடுவேன்” என்றும் கூறியிருந்தார். இதன்பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு  ‘தன் உயிருக்கு ஆபத்து’ என்று ஆடியோ மூலம் தீபா புகாரும் அனுப்பி இருந்தார்.

அந்த ஆடியோவில், “அ.தி.மு.க. என்ற மக்கள் சக்தியுடைய அமைப்பில் இந்த பேரவை இணைக்கப்பட்டதால், அதிருப்தியில் இருப்பவர்கள், சிலரது தூண்டுதலின்பேரின் தன்னிச்சையாக செயல்பட்டு என்னை மிரட்டி தொந்தரவு செய்கிறார்கள். குறிப்பாக 6 பேர் சேர்ந்து, என்னை துன்புறுத்தி டார்ச்சர் செய்கிறார்கள். இரவு, பகலாக போன் செய்து, வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்கள். தயவுசெய்து காவல்துறை எனக்கும், எனது கணவர் மாதவனுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கேட்டு கொண்டிருந்தார்.  இந்த தகவல் வெளியானபோதே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 13-ம் தேதி இன்னொரு ஆடியோ புகாரை சென்னை போலீஸ் கமிஷனருக்கு தீபா அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், ‘’என்னை சுற்றி ஏமாற்றி வந்து, என்னை தனிமைப்படுத்தி, பல துன்பங்களுக்கு ஆளாக்கி மிகப்பெரிய சூழ்ச்சியை செய்த நபர் ராஜா. அவருக்கு அலுவலகப் பணி கொடுத்து நான் வைத்திருந்த காலத்தில், எனக்கே தெரியாமல் செய்த பலவித தவறான காரியங்களால் நான் நடத்தி வந்த பேரவைக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. டிரைவர் ராஜா என்பவராலும், அவரைச் சார்ந்த நபர்களாலும் எனக்கும், எனது கணவர் மாதவன் ஆகிய எங்களின் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். அதிகாரப்பூர்வ தகவலை காவல்துறையிடமும் கொடுக்கவுள்ளேன். ராஜா ஒருமுறை எனது வீட்டுக்கு முன் ஏதோ ஒரு கூட்டம் நடக்கும் சமயம் எங்கள் இருவர் மீதும் திராவகம் வீசப்படும் என்று சொன்னதற்கு எல்லா ஆதாரம் இருக்கிறது. இதுபோல எத்தனையோ நடந்து விட்டது. அதை காவல்துறையிடம் முறையாக கொடுக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். மொத்தத்தில் எங்களை வீழ்த்த வேண்டும் என ஒரு கூட்டு சதி நடக்கிறது. என்னை என் கணவரிடம் இருந்து பிரித்துவிட்டு எப்படியாவது என்னையும் தனிமைப்படுத்தி ஏதோ செய்ய வேண்டும் என்று சதி திட்டம் அவர்களிடம் இருக்கிறது. நிரந்தரமாக என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடையாளத்தையே நான் இழந்துவிட வேண்டும் என்று என் மேல் வீண் பழி சுமத்தி சுமத்தி கெட்ட பெயர் உருவாக்க வேண்டும், மக்களிடம் நல்ல பெயரோ, நல்ல எண்ணமோ என் மீது இருக்கக்கூடாது என்பதுதான் சதி திட்டமாக இருக்கவேண்டும். இதை யார் செய்கிறர்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *