பா.ம.க.வில் உருவாக்கப்படும் செயல் தலைவர் பதவி – கட்சிக்குள் வெடிக்கும் புகைச்சல்! 

slider அரசியல்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸின் 80-வது வயதை முன்னிட்டு நடத்தப்பட்ட முத்து விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் தீரன், ராமதாஸ் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வில் ஆற்றிய செயல்கள் பற்றி பெருமை பொங்க பேசினார். அதன்பின்னர் சில நாட்களில் பேராசியர் தீரன் அ.தி.மு.க.விலிருந்து மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு பா.ம.க.வில் இணைந்துள்ளார்.

இப்படி தான் பேசிய பாஸிட்டிவ்வான பேச்சின் மூலம் பேராசியர் தீரனே பா.ம.க.வுக்கு திரும்பியுள்ளது டாக்டர் ராமதாஸுக்கு புதுத்தெம்பை கொடுத்துள்ளதாம். இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் ராமதாஸ். குறிப்பாக, கட்சியைவிட்டு பல்வேறு காரணங்களுக்காக வெளியே போனவர்களான தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்  வேல்முருகன் மற்றும் பி.ஜே.பி.யில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், படையாச்சி பேரவை நடத்திவிட்டு பி.ஜே.பி.யில் இணைந்த ஃபெரோஸ் காந்தி உள்ளிட்டோரை மீண்டும் பா.ம.வுக்குள் இழுக்க நினைக்கிறாராம்.  இந்த அஸைன்மெண்டுகளை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பை திரும்பி வந்திருக்கும் தீரனிடமே ஒப்படைத்துள்ளாராம். அதை அவர் வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில்  பா.ம.க.வில் இதுவரை இல்லாத பதவியான செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அதில் பேராசியர் தீரன் அமர்த்தப்படுவார் என்கிறார்கள் பா.ம.க.வின் மூத்த தலைவர்கள்.

இது குறித்து பா.ம.க.விலே வேறு பேச்சும் எழுந்துள்ளது. அது என்னவென்றால், “டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களின் நடவடிக்கை வேண்டுமானால் கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கலாம்.  ஆனால், ஏற்கெனவே பேராசிரியர் தீரன் திரும்ப வந்ததில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வருத்தமாக இருக்கிறார். எப்போதும் கட்சியை பொறுத்தவரை அன்புமணிக்கு விசுவாசமாக இருந்து வருபவர்  ஜி.கே.மணி. இப்போது மீண்டும் வந்திருக்கும் சீனியரான பேராசியர் தீரனுக்கு ஒருவேளை மாநில செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டால், தனக்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லாமல் போய்விடும் என்பதுதான் ஜி.கே.மணியின் வருத்தமாம். இது அன்புமணிக்கும் அவ்வளவாக விருப்பமில்லாத ஒன்றாகத்தான் இருக்கும். ஆகவே, ராமதாஸ் அய்யா செயல் தலைவர் பதவி உருவாக்கினால் கட்சிக்குள் சலசலப்புதான் ஏற்படும்” என்கிறார்கள் பா.ம.க.வின் இன்னொரு தரப்பினர்.

பா.ம.க.வை மீண்டும் வலுவான ஒரு கட்சியாக உருவாக்க டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். ஆனால், அது கட்சிக்குள் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தாமல் இருக்க வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது.

  • நிமலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *