இணைப்பை நோக்கி அ.தி.மு.க – சசிகலாவின் தலைமையில் இயங்க முடிவா?

slider அரசியல்

 

வேலூர் தொகுதி வெற்றி – தோல்வி ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வையும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் ரோம்பவே யோசிக்க வைத்துவிட்டது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை இதுபற்றி அதிகமாகவே ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டதாம்.

ஓர் ஓட்டில் ஜெயிச்சாலும் வெற்றிதான். ஓர் ஓட்டில் தோற்றாலும் தோல்விதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு நடைபெற்றுள்ள தேர்தல்களில் அது பொதுத் தேர்தல் என்றாலும், இடைத் தேர்தல் என்றாலும், அ.தி.மு.க.வின் வெற்றிக் கணக்கில் 22 இடைத் தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்  கொண்டது மட்டும்தான் வரவில் வருகிறது. ஆகவே, விரைவில் வெற்றிக்கான வழிகளை ஏற்படுத்திக் கொண்டால்தான் அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர முடியும். இதில் யார் தலைமையில் ஆட்சி என்பதோ, யார் தலைமையில் கட்சி என்பதோ முக்கியமல்ல. கட்சி முன்புபோல செல்வாக்கான கட்சியாக தமிழகத்தில் நடைபோட வேண்டுமென்றால், கட்சிக்குள்ளிருக்கும் பிளவுகளை நீக்க வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்கிற முடிவுக்கு அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை வந்திருக்கிறதாம்.

இது குறித்து அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை, பா.ஜ.க.விடம் கலந்து பேசிவருகிறதாம். இதன் முடிவில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலாவே சரி என்ற முடிவுக்கு இரட்டை தலைமை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வை பலவீனமாக்கக்கூடாது என்கிற உறுதியே இதற்கு முக்கிய காரணமாம்.

மேலும், சசிகலா – தினகரன் விரிசல் அதிகமாகி கொண்டே இருக்கிறதாம். தினகரன் எப்படி எடப்பாடியார், ஓ.பி.ஸ்.ஸை எதிர்த்தாரோ, அதே மாதிரிதான், சசிகலா குடும்பத்தில் உள்ள உறவுகளையும் எதிர்த்து கொண்டு அரசியல் செய்யவிடாமல் தடுத்து கொண்டிருந்தார்.  இதனால், விவேக், அனுராதா, தினகரன் என்று ஆளுக்கு ஒரு பக்கம் சிறைக்கு சென்று சொத்து விவகாரம் முதல் அரசியல் விவகாரம் வரை புகார்களை சசிகலாவிடம் சொல்லி வந்தனர். இது சசிகலாவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதன் விளைவு இப்போது விவேக் நடத்தி வரும் ஜெயாடிவி குழுமத்தில், தினகரன் செய்திகளே இடம்பெறாத அளவுக்கு போய்விட்டது. இந்த காரணத்திற்காக தினகரன் தனியாக ஒரு சேனல் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளராம். ஏற்கனவே குடும்ப சண்டை வெளிப்படையாக தெரிந்துவரும் நிலையில், தினகரன் ஒரு தனி சேனலை துவங்கிவிட்டால், அது சசிகலாவுக்கு மேலும் கோபத்தைதான் தரும் என்பதோடு,  இதன் முடிவு சசிகலாவிடம் இருந்து தினகரனை பிரித்துவிடலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும்பட்சத்தில் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவது எளிது என்று கணக்கு போட்டுள்ளதாம் அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை. இதில் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் ஒரே மனநிலை தானாம். வரும் காலங்களில் சசிகலா உடனிருந்தால்தான் தி.மு.க.வை சமாளிக்க முடியும் என்றும், கட்சியும் கட்டுக்குள் இருக்கும் என்ற முடிவுக்கு அ.தி.மு.க.வை போலவே பா.ஜ.க.வும் வந்துள்ளதாம்.

ஆக, விரைவில் அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா என்கிற பிரேக்கிங் நியூஸ் வந்தாலும் வரலாம்.

  • தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *