அமித் ஷா அழுத்தம் – நெருக்கடியில் முதல்வர் எடப்பாடி!

slider அரசியல்

சமீபத்தில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அக்டோபர் மாதத்தில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்” என்றார். அவ்வளவுதான் அவரை நெருக்கத் தொடங்கிவிட்டது பா.ஜ.க. தலைமை. குறிப்பாக, ஆகஸ்ட் 11ம் தேதி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த அமித் ஷா, முதல்வரிடம் எங்களுக்கு தமிழகத்தில் 33 சதவீத இடங்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஒதுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதால், முதல்வருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

நாடாளுமன்றத்  தேர்தலில் பா.ஜ.வுக்கு ஐந்து தொகுதிகள், அதாவது மொத்த இடங்களில் 12 சதவீதம் மட்டுமே ஒதுக்கி அ.தி.மு.க. ஏமாற்றி விட்டதாக  தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் தேர்தலுக்கு முன்பிருந்தும், இப்போது வரையும் பேச்சிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது டெல்லியில் இருக்கும் பா.ஜ.க.வின் தயவினால்தான் நடைபெற்று வருகிறது என்பது தமிழகத்திலுள்ள  பிற கட்சிகளின் நம்பிக்கை.

 

நிலைமை இப்படியிருக்க,  “ஒருவேளை அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமானால், கறாராக தொகுதி ஒதுக்கீடுகள் கேட்டு வாங்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நாம் தனித்து போட்டியிடுவோம்” என்கிற குரல்கள் தேசிய தலைமையிடம் தமிழகத்திலுள்ள பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் மூலம் தெளிவாக சொல்லப்பட்டதாம். இதன் எதிரொலிதான் அமித் ஷா கடும் நிபந்தனை விதிப்பு போல 33 சதவீதம் உள்ளாட்சித் தேர்தலில் வேண்டும் என்று கேட்ட விஷயம் என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த சில நிர்வாகிகள்.

என்னதான் டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து மூன்று எம்.எல்.ஏ.க்கள் உட்பட சில முக்கிய புள்ளிகள் அ.தி.மு.க.விற்கு திரும்பி வந்திருந்தாலும், உள்ளூர் அளவில் மக்களோடு தொடர்பில் இருக்கும் நிறைய பேரை உள்ளாட்சி பதவிகள் மூலம் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு கொண்டு வரவும், அதன்மூலம் அ.தி.மு.க.வை பலப்படுத்தவும் முதல்வர் எடப்பாடி திட்டம் போட்டிருந்தாராம். இதில் பா.ஜ.க.வுக்கு 33 சதவீதம் போனால், இதற்கடுத்தாற்போல பா.ம.க.வை சமாளிக்க வேண்டும். தே.மு.தி.க.வை சமாளிக்க வேண்டும். ஆக, இந்த பார்முலாபடி பார்த்தால் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.கவை உடைக்க முடியாமல் போய்விடும் என்கிற நெருக்கடி புரிந்ததால் ரொம்பவே வருத்தத்தில் முதல்வர் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக கிடைத்த தகவல் என்னவென்றால், எதற்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தி தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் கூட்டணி கட்சிகளோடு மனஸ்தாபம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை தள்ளிபோட்டாலும் போடலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *