தி.மு.க.வின் வேலூர் கோட்டையில் விழுந்த ஓட்டை – அதிர்ச்சியில் ஸ்டாலின்!     

slider அரசியல்
அதிர்ச்சியில் ஸ்டாலின்

வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான மறு  தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. வேலூர் பாராளுமன்றத் தொகுதி என்பது  வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, கே.வி. குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது. இதில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வுக்கு விழுந்த அபரிதமான முஸ்லிம் ஓட்டுகள் தான் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த தி.மு.க.வை முன்னேறச் செய்து, இறுதியில் வெற்றிபெறவும் வைத்துவிட்டது என்கிறார்கள் தேர்தல் கணிப்பாளர்கள்.

வேலூர் பாராளுமன்றத் தொகுதியை பொருத்தவரை, பெருமளவில் வன்னியர்களும், அடுத்த நிலையில் முதலியார்கள் இருந்தாலும், வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குகள் என்பது 3 லட்சம் முஸ்லிம் ஓட்டுகள் தான்.

ஆக, வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான இத் தேர்தலில், தி.மு.க பெற்ற இந்த வெற்றிக்கு வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள் வசித்து வரும் முஸ்லீம் சமூகத்து வாக்குகள்தான் முக்கியமாக காரணமாக அமைந்திருக்கிறது. இது குறித்து ஆதாரபூர்வத் தகவல்களும் வந்துள்ளன. ஆம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியிலுள்ள 3 லட்சம் முஸ்லிம் ஓட்டுகளில் பெருவாரியான வாக்குகள் தி.மு.க.வுக்கு விழுந்திருக்கிறது.

வேலூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான துரைமுருகன் ஏறக்குறைய ஐம்பது வருடம் அனுபவம் கொண்ட அரசியல்வாதி. இங்குள்ள பெரும்பாலான முஸ்லிம்களுடன் நல்ல தொடர்பு வைத்திருப்பவர். அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதால், துரைமுருகனுக்காகக்கூட முஸ்லிம்களில் பெருவாரியானோர் தி.மு.க.வுக்கு வாக்களித்திருக்கலாம் என்கிறது வேலூர் அரசியல் வட்டாரம்.

இவர்களிலே இன்னொரு தரப்பு வேறு கருத்தை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால், வாக்குப் பதிவு அன்று காலை 12.00 மணியிலிருந்து ஊடகங்களில் ஜம்மு- காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து பற்றி தகவல் வர ஆரம்பித்து விட்டது. அதன்பிறகு ஏறக்குறைய 35 சதவீதத்துக்கு மேலான வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இதன்படி நோக்கினால், மதியத்திற்கு மேல் ஓட்டு அளிக்கவந்த பெருவாரியான முஸ்லிம்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி உறவு வைத்திருக்கும் அ.தி.மு.க.வின் இரட்டை இலைக்கு போடாமல், உதயசூரியனுக்கு போட்டிருக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

வழக்கம்போல் நாம் தமிழர் கட்சிதான் அ.தி.மு.க.வின் வெற்றியை பறித்துவிட்டது என்றும் வேலூரில் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், “வேலூர் தி.மு.க.வின் கோட்டை அதை வெற்றிக் கோட்டையாக்கி காட்டுங்கள்’’ என்று ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியதை வைத்துப் பார்த்தால் வேலூர் மக்கள் லட்சக் கணக்கு வித்தியாசத்தில் அல்லவா? தி.மு.க.வை வெற்றி பெற வைத்திருக்க வேண்டும். இப்படி தட்டுதடுமாறி ஜெயித்திருப்பதை கணக்கிட்டால், தி.மு.க.வின் வேலூர் கோட்டையில் சற்று அதிகமாகவே ஓட்டை விழுந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. இது தி.மு.க.வுக்கும், ஸ்டாலினுக்கும் நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும்!

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *