ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு தந்த ரஷ்யா

slider அரசியல்

ஜம்மு- காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம் மற்றும் அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது பற்றி வெளிநாடுகளின் கருத்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் வல்லரசு நாடுகள் என்று சொல்லப்படும் வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய ஐந்து நாடுகளின் ஆதரவு, எதிர்ப்பு நிலை என்பது சர்வதேச அளவில் முக்கியமான ஒன்று.

இதில் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அதன் கருத்தை ஆதரவா? எதிர்ப்பா? என்று புரிந்துகொள்ள முடியாதபடிதான் இதுவரை இருக்கிறது. குறிப்பாக, இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்கிற அளவிலே பேசி வருகிறது. இதற்கு என்ன அர்த்தம் என்று விளங்கவில்லை. ஆனால், ரஷ்யா காஷ்மீர் விவகாரத்தில் தெளிவாக தன் கருத்தை இப்போது வெளியிட்டிருக்கிறது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உண்மையான தகவல்களை ஆய்வு செய்ததில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை இந்திய அரசு ரத்து செய்ததும், அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்ததும், அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்திய அரசு செய்துள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பின் அதை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைதியாகப் பேசித் தீர்க்க வேண்டும். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, இரு மாநிலங்களாகப் பிரித்தது போன்ற காரணங்களை வைத்து, எந்தவிதமான மோசமான சூழலும் தங்கள் பிராந்தியத்தில் உருவாவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்திருக்கிறது.

நமது பக்கத்திலே இருக்கும் மற்றொரு வீட்டோ அதிகாரம் கொண்ட நாடான சீனா இதுபற்றி வெளியிட்ட அறிக்கையை ஆதரவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், அதற்கேற்றார்போலவே அதுவும் இந்த விவகாரத்தில் பேசி வருகிறது. எப்படிப் பார்த்தாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான மனநிலையில் தான் சீனா இருந்து வருகிறது என்பதைக் காண முடிகிறது.

 

அதே வேளையில், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிலிருந்து ரஷ்யாவைப் போன்ற அதிகாரபூர்வ முறையில் எந்த கருத்துக்களும் சொல்லப்படவில்லை. அவ்விரு நாடுகளும், இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் விவகாரத்திற்காக மோதிக் கொள்ளக்கூடாது என்கிற பொத்தாம் பொதுவான பேச்சுக்களை பேசிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில், ரஷ்யாவின் இந்திய ஆதரவு கருத்து என்பது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் தெம்பாக அமையும்.

விசாகன்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *