வேலூர் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற வைத்த நாம் தமிழர் கட்சி

slider அரசியல்

 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி

17வது மக்களவைத் தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி மறு தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் இன்று ஆகஸ்ட் 9-ம்தேதி வெளியாகியிருக்கிறது. இதில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அ.தி.மு.க.வின் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்தத் தேர்தல்  முடிவு மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்திருக்கிறது.

இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முதல் 5 சுற்றுவரை ஏறக்குறைய 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். அதன்பிறகுதான் கதை மாறத் தொடங்கியது. மெல்ல மெல்ல அடுத்தடுத்த சுற்றுகளில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்று கடைசி சுற்றான 24-வது சுற்றின் முடிவில் வெற்றியே பெற்று விட்டார். இது தேர்தல்களில் அதிசயமாகவும், அபூர்வமாகவும் நடக்கக்கூடிய ஒன்று. அது இந்த வேலூர் தேர்தல் முடிவில் நடந்திருக்கிறது.

அடுத்து இன்னுமொரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்த தொகுதியில் மூன்றாவது கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலெட்சுமி 26,995 வாக்குகள் வாங்கியுள்ளார். ஏ.சி.சண்முகத்தின் 8,141 வாக்குகள் தீபலெட்சுமி பெற்ற இந்த 26,995க்குள் சென்றுவிட்டது என்கிறார்கள் வேலூர் அ.தி.மு.க.வினர்.

இதற்கு வேலூர் அ.தி.மு.க.வினர் விபரமான புள்ளி விபர கணக்கும் சொல்கிறார்கள். அதையும் பார்ப்போம். “ஆறு சுற்று வரைக்குமே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலெட்சுமி 2,000 வாக்குகள் அளவில் தான் பெற்றிருந்தார். அதன்பிறகு ஏழாம் சுற்றிலிருந்து வேகம் எடுத்து அதிகமான வாக்குகள் பெறத் தொடங்கினார். குறிப்பாக,  நாம் தமிழர் கட்சி 9-வது சுற்றில் 12 ஆயிரம் வாக்குகள் பெற்றது. இங்கிருந்துதான்  அ.தி.மு.க. பின்னேற்றம் கொள்ளத் தொடங்கியது. தி.மு.க. முந்த தொடங்கியது. இப்படியாக நாம் தமிழர் கட்சி வரிசையாக 13000, 14000, 16000, 20000 என்று முன்னேறிக்கொண்டு சென்றது, அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பெற்றுத்தான் என்கிறது வேலூர்ஐ அ.தி.மு.க.வினர். இதனால்தான் தி.மு.க., அ.தி.மு.க. இடையேயான வாக்கு வித்தியாசம் கடைசி சுற்று வரையிலும் 9 ஆயிரம் என்று மாறாமல் இருந்தது. கடைசியில் நாம் தமிழர் கட்சி 26,995 வாக்குகள் பெற்றது. தி.மு.க. வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது. ஆக, அ.தி.மு.க.வின் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பிரிக்கவில்லை என்றால் தேர்தல் முடிவு எங்களுடையதாக இருந்திருக்கும்’’ என்று சொல்கிறார்கள் வேலூர் அ.தி.மு.க வட்டாரத்தினர்.

வேலூர் தேர்தல் பிரசாரத்தில் சீமானின் கனல் பேச்சில் அதிகம் வறுபட்டது ஸ்டாலினும், தி.மு.க.வும் தான். இன்னும் சொல்லபோனால் தனிநபர் விமர்சனமாகக்கூட எதிரொலித்தது. ஆனால், அவர் கட்சியின் வாக்குகளால் தி.மு.க. வேட்பாளர் ஜெயித்துள்ளார். இதைதான் அரசியல் விந்தை. “இந்த தேர்தல் முடிவு மூலம் எங்களுடைய கட்சியின் தாக்கமும், செல்வாக்கும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது என்பதை ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கும், பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க.வுக்கும் நாம் தமிழர் கட்சி உணர்த்தியிருக்கிறது” என்கிறார்கள் சீமானின் தம்பிகள்.

 

தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *