கூகுள் நிறுவனத்திற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

slider அரசியல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் என்றாலே சர்ச்சைக்கு மட்டுமல்ல, அதிரடிப் பேச்சுக்கும் பெயர் போனவர் என்பது உலகமறிந்த விஷயம். அவரது இப்போதைய சர்ச்சைக்குள் சிக்கியவர் கூகுள் சி.இ.ஓ.வாக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. ஏற்கெனவே அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்ற காலத்திலே ‘என்னைத் தோற்கடிக்க கூகுள் வேலை பார்த்தது’’ என்று, கூகுள் நிறுவனத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்தவர்தான் டிரம்ப்.

இதன்பின்பு கூகுள் சி.இ.ஓ.வான சுந்தர் பிச்சை அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பின்னர் மேற்கொண்டு இந்த விவகாரம் சம்பந்தமாக எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால், தற்போது இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

இதற்கு காரணம் கூகுள் நிறுவனத்தில் டெக்னிக் பொறியியலாளராக இருந்தவர் கெவின் செர்னகீ. இவர் தற்போது கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இவர்தான் சமீபத்தில் பரபரப்பு கிளப்பும் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ’’2020-ல் டிரம்ப் தோற்க வேண்டும் என கூகுள் விரும்புகிறது. குறிப்பாக அதுதான் அவர்களின் முக்கிய வேலைக்கான இப்போதைய திட்டம்’’ என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட் வந்ததும் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கூகுள் மீதும், சுந்தர் பிச்சை மீதும் தனது கோபத்தை காட்டத் தொடங்கியுள்ளார். தனது டிவீட்டில் டிரம்ப், “முன்பு ஒயிட் அவுஸ் அலுவலகத்தில் சுந்தர் பிச்சையை சந்தித்தேன்.  உங்கள் நிர்வாகம்
2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹுலாரியுடன் சேர்ந்து எனக்கு எதிராக என்னென்ன செய்தீர்கள்? சீன ராணுவத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையா? போன்ற என் கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் சொல்ல தடுமாறினர். அதன்பின்பு இப்போது வெளிவந்த கூகுள் பொறியியலாளலான கெவின் செர்னகீயை ட்வீட்டை அறியும் வரை அவர்கள் 2020 தேர்தலை சட்டவிரோதமாக பாதிப்படைய செய்வதற்கு திட்டமிடவில்லை என்றுதான் நம்பினேன்.   ஆனால் 2016-ம் ஆண்டில் அவர்கள் செய்ததைப் பற்றிய பயங்கரமான விஷயங்களை அறிந்ததோடு, வரும் 2020–ம் ஆண்டு தேர்தலிலும் டிரம்ப் தோல்வி அடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை அறியும் வரை எல்லாமே நன்றாக இருந்தது என்று தான் கூறவேண்டும்.   இவை அனைத்தும் சட்டவிரோதமானது. நாங்கள் கூகுளை மிகவும் உன்னிப்பாக கவனத்து வருகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த ட்வீட்டுக்கு கூகுள் நிறுவனம் உடனடியாக  ஓர் அறிக்கை மூலம் விளக்கமளித்திருக்கிறது. தனது அறிக்கையில் கூகுள் நிறுவனம், “வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில்  டிரம்ப் தோற்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டுள்ளது என்று குற்றச்சாட்டு கூறிய கெவின் செர்னகீயின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது. அரசியல் சாராமல் செயல்படுவதே கூகுளின் கொள்ளை. அரசியல் நோக்கங்களுக்காக முடிவுகளை சிதைப்பதென்பது எங்கள் வணிகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதோடு பயனர்களுக்கு பயனுள்ள உள்ளடக்கத்தை வழங்கவேண்டும் என்பதே எங்கள் கொள்கை’’  என  தெரிவித்திருக்கிறது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு உலகளவில் கூகுள் நிறுவன முன்னாள் ஊழியர் ட்வீட் மூலம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

 

விசாகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *