காங்கிரஸ் மீது புலியாகப் பாயும் வைகோ!  உடையுமா தி.மு.க கூட்டணி?

slider அரசியல்
வைகோ – கேஎஸ் அழகிரி

 

காஷ்மீர் மாநிலத்தில் 370வது பிரிவு நீக்கம் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, பா.ஜ.க. அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிராகவும், குற்றம்சாட்டும் வகையில்தான் பேசினார். இப்படி வைகோ பேசியதற்கு பா.ஜ.க. தரப்பிடமிருந்து அல்லவா எதிர்ப்பு வந்திருக்க வேண்டும்? ஆனால், இதற்கு நேர் எதிர்மாறாக காங்கிரஸிடமிருந்து வந்திருக்கிறது. இது எதனால் என்றால், வைகோ ஒரு சிறந்த பேச்சாளர். வரலாறு மற்றும் அரசியல் பற்றி பேசத் தொடங்கினால் பல நூற்றாண்டு விஷயங்களை பேசக் கூடியவர். இதோடு உணர்ச்சி வசமானவரும்கூட. இதுதான் அன்று வைகோவின் பேச்சு ஆரம்பத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஆரம்பித்து முடிவில் காங்கிரஸை பதம் பார்ப்பதாக முடிந்தது. இதனால் தான் இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வைகோவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள். இந்த விவகாரம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அன்று மாநிலங்களவையில் வைகோ, காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது மற்றும் ஜம்மு- காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது என்கிற வகையில் பல்வேறு சட்ட விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் தடம் மாறி காஷ்மீரின் இந்த நிலைமைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று உணர்ச்சி பெருக்கெடுத்து பேசத் தொடங்கினார். இதனை காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.

இதனைத் தொடர்ந்து வைகோ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்து வார்த்தைப் போர் நடத்தியது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. இது இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, “காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் தயவில்தான் வைகோ எம்.பி-யாகி இருக்கிறார். அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இந்த பேச்சுக்கும் வைகோ கடுமையாக பதிலடி கொடுத்தார். அது என்னவென்றால், “காங்கிரஸ் தயவில் நான் எம்.பி-யாகவில்லை. ஓர் இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ். நான் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் தான் எம்.பி.யாகியுள்ளேன்’’ என்றார்.

இப்படி காஷ்மீர் விவகாரத்தில் எதிர் நிலைப்பாடு எடுத்த பேசத் தொடங்கிய வைகோவின் பேச்சு நிலைமாறி காங்கிரஸை எதிர்க்கும் விதமாக மாறியிருக்கிறது. இது தமிழக அளவில் தி.மு.க. தலைமையில் ஒரே கூட்டணியில் இருந்துவரும் ம.தி.மு.க. காங்கிரஸ் உறவில் பெரும் பகையையே ஏற்படுத்திவிட்டது. இதனை எப்படி முடித்து வைப்பது என்று தெரியாமல் ஸ்டாலின் தவிக்கிறார் என்றும், மேலும், இந்த ஒரு விவகாரத்திலே கூட்டணிக்குள்ளே இவ்வளவு மோதல், சலசலப்பு என்றால், மீதி காலங்களையும் எப்படி ஓட்டுவது என்றும் நினைக்கிறாராம் ஸ்டாலின் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

அனேகமாக, இந்த விவகாரம் முத்தி முடியும் தறுவாயிலில் வைகோ ஜனநாயக முற்போக்கு கூட்டணியைவிட்டு வெளியேறிவிடுவார் என்றே தோன்றுகிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *