amitsha

தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர்!

slider அரசியல்

amitsha

 17வது பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்தே தமிழக பா.ஜ.க.வுக்கு  புதிய தலைவர் நியமிக்கப்படவிருக்கிறார் என்கிற தகவல் வந்து கொண்டே இருந்தது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்லாமல், தற்போதைய தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனின் பதவிக் காலமும் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்ட நிலையில் உள்ளதும் இதற்கு முக்கிய காரணம்.

இப்போது தமிழக பா.ஜ.க.வில் இந்த விஷயம்தான் தீவிரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கான புதிய தலைவரை நியமிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளதாம் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை. தமிழகத்தில் அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால் வலுவான தலைவரை களமிறக்க வேண்டும் என நினைக்கிறாராம் அமித்ஷா. அதனால் அவசரப்பட்டு புதிய தலைவரை நியமனம் செய்யாமல், யாரை நியமித்தால் கட்சிக்கு பலம் சேர்க்க முடியும் என அலசி ஆராயும் பணிகளை பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் ஒப்படைத்திருக்கிறாராம்.

இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், பி.டி.அரசகுமார், ஹெச்.ராஜா போன்றோர் மாநிலத் தலைவர் பதவியை பிடித்து விட முட்டி மோதி வருகின்றனர். வானதி சீனிவாசனுக்கு தலைவர் பதவி மீது ஒரு கண் இருந்தாலும், மீண்டும் பெண் தலைவரை நியமிக்க வாய்ப்பு குறைவு என்கிற கள நிலவரத்தை உணர்ந்துள்ளதால் சற்று ஒதுங்கியே உள்ளாராம்.

அடுத்த தமிழக பா.ஜ.க.வின்  தலைவர் பதவிக்காக ஆளாளுக்கு ஒரு சிபாரிசை தேடி டெல்லிக்கு படையெடுக்கிறார்களாம் தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள். இவர்களில் ஹெச்.ராஜா மீது பல்வேறு சர்ச்சைகள் உள்ளதாலும், கட்சிக்கு பி.டி.அரசக்குமார் புதுவரவு என்பதாலும் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரைத் தவிர சி.பி.ராதாகிருஷ்ணன், முருகானந்தம் ஆகியோர் தான் தற்போதைய நிலவரப்படி முன்னணியில் உள்ளார்களாம்.

பா.ஜ.க. தேசிய தலைமை தமிழக பா.ஜ.க. தலைவரை விரைவில் அறிவிக்கும் என்றும், அதன்பிறகு தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும், அனேகமாக இது அக்டோபர் மாதத்தில் அரங்கேற அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறது தமிழக அரசியல் வட்டாரம்.

தொ.ரா.ஸ்ரீ.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *