பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் விரைவில் இந்தியாவுடன் இணைப்போம் – அதிரடி கிளப்பும் சுப்ரமண்ய சுவாமி

slider அரசியல்

 

ஜம்மு-  காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பா.ஜ.க. தலைவர்கள் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பா.ஜ.க.  அரசு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு- காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசமாக  பிரிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதற்கு பா.ஜ.க.வில் எப்போதும் வித்தியாசமான மற்றும் அதிரடி குரலாக எதிரொலிக்கும் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி., ஆதரவு தெரிவித்திருப்பதுடன் மிச்சமிருக்கும் பாக். ஆக்ரமிப்பு காஷ்மீரும் இதுபோல் இந்தியாவுடன் விரைவில் இணைக்கப்படும் என்று பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சுப்பிரமணிய சுவாமி இன்று மாநிலங்களவையில் ஆகஸ்ட் 6-ம் தேதி  தனது பேச்சில்,  “இன்று அவையில் நடந்த சரித்திர நிகழ்வை  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றுதான் இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டப்பிரிவு சொல்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கூட அந்த சட்டம் அப்படித்தான் சொல்கிறது. நாங்கள் அதை 370 சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் உறுதி செய்து இருக்கிறோம்.  370 சட்டப்பிரிவை பயன்படுத்திதான் காஷ்மீரில் பண்டிட்கள் கொல்லப்பட்டனர். 5000 க்கும் அதிகமான பண்டிட்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். தற்போது அந்த சட்டத்தையே நாம் நீக்கி உள்ளோம். இனி அங்கு எல்லோருக்கும் சம உரிமை கண்டிப்பாக கிடைக்கும். அடுத்து எங்களின் அடுத்த அஜண்டா (Agenda) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான். அதை விரைவில் செய்வோம். காஷ்மீரில் இருக்கும் எல்லா ஆக்கிரமிப்பு பகுதிகளையும் மீட்டு இந்தியாவுடன் இணைப்போம்’’ என்று பேசியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சர்வதேச எதிரொலிப்புகள் என்னவென்று தெரிய வருவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகலாம். அதற்குள் சுப்ரமண்ய சுவாமி இப்படியொரு பேச்சை எடுத்திருப்பது அயலுறவு கொள்கையில் ராஜதந்திர முதிர்ச்சியை காட்டவில்லை என்றும், உலகில் இப்போதும் வீட்டோ அதிகாரத்தில் ஐந்தில் ஒரு உறுப்பினராக இருக்கும், பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனாவை பகைத்துக் கொள்வது என்பது பின்னடவை ஏற்படுத்தலாம் என்றும், இதில் எப்போதும் இந்தியா  விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர் அரசியல் நோக்கர்கள்.

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *