தி.மு.க.வை இரண்டாக உடைப்போம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

slider அரசியல்

 

அ.தி.மு.க.வின் அமைச்சர்களில் எப்போதும் பரபரப்புக்கு பேர் பெற்றவர் ராஜேந்திர பாலாஜி. வேலூர் தேர்தல், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எனும் ஹைலைட் விஷயங்களுக்கு மத்தியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தை மேலும் சூடுபடுத்தியிருக்கிறது.

விருதுநகரில் ஆகஸ்ட் 5-ம் தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, ‘’ஸ்டாலினுக்கு எதைக் கண்டாலும் பயம். அவருடைய நிழலைப் பார்த்து அவரே பயப்படுகிறார். நாங்கள் ஒன்றும் குமாரசாமி கிடையாது. இங்கே அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் வலுவாக உள்ளனர். இங்கு சலசலப்பு கிடையாது. எல்லோரும் கலகலப்பாக இருக்கின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க.- தி.மு.க. என இரண்டே கட்சிகள்தான். அ.தி.மு.க.  ஆட்சியை கலைப்பதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்தது தினகரன்தான். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. அ.தி.மு.க.  ஆட்சியின் நிழலைக்கூட ஸ்டாலினால் தொட முடியாது. அப்படி தொடலாம் என அவர் நினைத்தாலே அவருடைய கட்சிக்குதான் ஆபத்து. அவரது கட்சியை   ‘ஏ,. பி’ என இரண்டாகப்  பிரித்து விடுவோம்” என காட்டமாகப் பேசினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, தி.மு.க.  ‘ஏ’ என்றால் இப்போதிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வா? தி.மு.க.  ‘பி’ என்றால் அழகிரி தலைமையில் உருவாக்கப்படும் அமைப்பா? அல்லது கனிமொழி தலைமையில் உருவாக்கப்படும் அமைப்பா? இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு எந்தளவுக்குப் பங்கிருக்கிறது? கூட்டணி கட்சியான மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு எந்தளவுக்கு பங்கிருக்கிறது? என்கிற வகையில் விவாதம் சென்றுக் கொண்டிருக்கிறது.

‘நெருப்பு இல்லாமல் புகையாது’ என்பார்கள். அப்படியென்றால் இந்தப் புகை உண்மையாக இருக்கும்பட்சத்தில் விரைவில் புகையின் வெளிச்சம் வெளிவரும்.

விசாகன்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *