காஷ்மீர் விவகாரம் – காங்கிரஸுக்குள் வெடித்த மோதல்!

slider அரசியல்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷா, கடந்த 5-ம் தேதி பார்லிமெண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35-ஏ சட்ட உரிமையை நீக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு உடனடியாக குடியரசுத் தலைவர் கையெழுத்தும் இட்டதால் அமலுக்கும் வந்துவிட்டது. இதில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் செல்வாக்கு செலுத்தும் கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு என்கிற நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இது ஒரு பக்கம் என்றால், பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளே இப்படியான ஒரு குழப்பம் ஓடிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குழப்பம் விளைவிக்கும் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள் சிலவற்றை கொஞ்சம் பார்ப்போம் :

    அபிஷேக் மனு சிங்வி :  காங்கிரஸ் உட்பட 4 கட்சிகள் மட்டுமே காஷ்மீர் மசோதாவை எதிர்த்தன. இந்த மசோதா குறித்து எங்களுக்கு தெரியாது என சொல்ல மாட்டோம். கடந்த ஒரு வாரமாக, குலாம் நபி ஆசாத் முதல் சிதம்பரம் வரை இந்த மசோதா குறித்து பேசி வந்தனர். இது வெளிப்படையான ரகசியம். ஆனால், உறுதியாக கூற முடியவில்லை. எங்களில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. இந்த மசோதாவிற்கு, குறைந்த கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்த்து ஓட்டு போட்டன. ஆனால், ஜனநாயக ரீதியில், பெரும்பான்மை முடிவு ஏற்று கொள்ளப்பட வேண்டும்.

 

      ராகுல் காந்தி : காஷ்மீரை தன்னிச்சையாக பிரிப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை சிறையில் அடைப்பது மற்றும் அரசியல் சாசனத்தை மீறுவதால், தேசிய ஒற்றுமை பலப்படாது. இந்தியா என்பது அதன் மக்களால் உருவாக்கப்பட்ட நாடு. நிலத்தால் உருவாக்கப்படவில்லை. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது நாட்டின் பாதுகாப்பில் கடும் விளைவுகளைஏற்படுத்தும்.

    மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா:  370வது சட்டப்பிரிவை நீக்குவது குறித்த விவாதத்தை தாராளமய மற்றும் பழமைவாதிகளுக்கு இடையிலான விவாதமாக மாற்றியது துரதிர்ஷ்டவசமானது. கட்சிகள், தங்களது, கொள்கை மற்றும் கோட்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் இறையாண்மை மற்றும் கூட்டாட்சி, காஷ்மீரில் அமைதி, அம்மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் காஷ்மீர் பண்டிட்களுக்கு நீதி கிடைப்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீபேந்தர் ஹூடா:  இந்த 21ம் நூற்றாண்டில், 370வது சட்டப்பிரிவு தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, நாட்டின் நலனுக்கானது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரும் பலன்பெறும். அமைதியான சூழ்நிலையில், இதனை அமல்படுத்த வேண்டியது, அரசின் கடமை.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி: எனது வழிகாட்டி ராம் மனோகர் லோகியா, ஆரம்பம் முதல் 370வது சட்டப்பிரிவை எதிர்த்து வந்தார். மத்திய அரசின் நடவடிக்கை, நாட்டை திருப்திபடுத்தும் நடவடிக்கை என்பது எனது தனிப்பட்ட கருத்து. சுதந்திரத்தின் போது செய்யப்பட்ட தவறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

இதெல்லாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் முரண்பட்ட கருத்துகள். இதில் உச்சகட்டமாக காங்கிரஸின் பார்லிமெண்ட் கொறடாவான கலிடா தனது எம்.பி. பதவியையே ராஜினாமா செய்துவிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’காஷ்மீர் விவகாரத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டது. ஆனால், அந்த கொறடா உத்தரவு,  நாட்டு மக்களின்   எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் முற்றிலும் எதிரானது. காங்கிரசின் முடிவு தற்கொலைக்கு சமமானது. இந்த முடிவில் நான் பங்கு வகிக்கவில்லை‘’ எனக் கூறியுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் ஜம்மு – காஷ்மீர், லடாக் பகுதிகளை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்ப்பதும், ஆதரிப்பதுமாக காங்கிரஸ் பிளவுபட்டு நிற்கிறது என்பது கண்கூடாக வெளிப்பட்டுள்ளது. இது விரைவில் ஏற்கெனவே தலைவர் இன்றி தவித்துவரும் கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் ஒன்றாக அமையலாம்.

 தொ.ரா.ஸ்ரீ. 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *