வைகோவின் எம்.பி. பதவிக்கு மீண்டும் ஆபத்து? ம.தி.மு.க.வுடன் கைகோர்க்கும் வி.சி.க

slider அரசியல்
வைகோவும் திருமாவும்
வைகோவுடன் திருமா

 

கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான்,  வைகோ மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கில் வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில்  உபா சட்ட திருத்த மசோதா மீது ராஜ்யசபாவில் வைகோ தமது முதல் உரையை நிகழ்த்தினார். அதில் பேசும்போது, ’’சுதந்திர இந்தியாவில் 124-ஏ எனும் தேசத் துரோகப்  பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் குற்றவாளி நான். இந்த வழக்கில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளேன். இன்னும் சில வாரங்களில் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டால் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன். நான் மீண்டும் இந்த சபைக்கு வராமல் போய்விடுவேன். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை’’ என்று பேசியுள்ளார்.

ஒருவேளை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில்  வைகோவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதுடன் எம்.பி. பதவியும் பறிபோகும்.  இதனால் பல்வேறு அரசியல் மாற்றங்களும் நிகழவும் வாய்ப்பிருப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஏனென்றால், இப்போது வேண்டுமானால் தி.மு.க. ஆதரவுடன் வைகோ எம்.பி.யாகி இருக்கலாம். ஆனால், இந்த வழக்கை வை.கோ மீது போட்டதே தி.மு.க. தான் என்பது ம.தி.மு.க.வுக்கு கோபம் தரக்கூடிய ஒன்று. அப்படி வைகோவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் செல்ல நேரிட்டால், நிச்சயம் தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேறிவிடும் என்றும் சொல்கிறார்கள். அப்படி ம.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் பேச்சு கிளம்பியிருக்கிறது.

 – விசாகன்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *