சினிமா தொழில் ஏ டூ இசட் – Cinema Business A to Z

slider சினிமா
சினிமா தொழில் ஏ டூ இசட்
cinema business a to z

 

அத்தியாயம் 1

நடப்புலக மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முன்னணி வகிப்பதும், ஏனைய பொழுதுபோக்கு விசயங்களைவிட அதிக நேசிப்பும், சுவாசிப்பும் கொண்டது சினிமா. சினிமாவை விரும்பாத மனிதர்கள் இன்றிருக்கும் ஆதிவாசிகள்போல் மிகக்குறைவு. மனிதர்களின் உள்ளக் கிடக்கைகளை காட்சிப் படிவமாக கண்களால் காணச்செய்து, அதன்மூலம் உணர்வுகளைத் தூண்டி, இதயத்தின் மூலையில் தூங்கிக்கொண்டிருக்கும் நம் தேடுதல்களை உணர்ச்சியாகக் கொண்டுவருவதால்தான், ஏனைய பொழுது போக்கு விஷயங்களைவிட சினிமா மனிதர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

சினிமா பார்க்கும் ஒவ்வொரு மனிதனும், திரையில் தோன்றும் மாந்தர்களின் செய்கையை தம் செய்கையோடு ஒப்பிட்டு ஆனந்தமோ, அதிர்ச்சியோ, இன்பமோ, துன்பமோ, வருத்தமோ அடைந்துகொள்கிறான். இங்கே தம்மைப் பாதித்த, தமக்குப் பிடித்தமான, தாம் செய்த, வாய்ப்பு கிடைக்காமல் செய்ய மறந்த விஷயங்களைத் திரையில் காணும் மனிதன், அதன்மூலம் தன் வாழ்வில் ஏதோ ஒன்றை அடைந்துவிட்டதைப் போன்ற உணர்வைப் பெற்று, ஆனந்தம் அடைகிறான். அப்படியான உணர்வைக் கொடுத்த சினிமாவை நல்ல சினிமா என்கிறான். இதில் முரண்பாடுகள் ஏற்படின் மோசமான சினிமா என முத்திரை பதிக்கிறான்.

வெகுஜனங்களுக்கு சினிமா என்பது பொழுதுபோக்கு விஷயமாக இருந்தாலும், அதன் தயாரிப்பாளருக்கு அது தொழில். இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஏனைய கலைஞர்களுக்கும் அது வேலை. அந்தச் சினிமாவில் வணிகத் தொடர்புகளை மையப்படுத்தி செயல்படுபவர்களுக்கு அது ஒரு வியாபாரம். ஆக, பொழுதுபோக்கு அம்சமாகவும், தொழிலாகவும், வியாபாரமாகவும், வேலையாகவும் பல தளங்களில் செயல்படும் சினிமாக்கள், குறிப்பாகத் தமிழ்ச் சினிமாக்கள் பெரும்பாலும் தொடர் தோல்விகளைத் தழுவி வருவது வேதனையான, வருந்தத்தக்க நிகழ்வு.

செய்த முதலீட்டை பல மடங்காக குறுகிய காலத்தில் திரும்பப் பெறுவது என்பது சினிமாத் தொழிலில் மட்டுமே சாத்தியம். உலகில் இப்படிப்பட்ட தொழில் வேறு எதுவுமில்லை. அப்படி இருக்குமானால் அது சூதாட்டமாகவோ, சட்டத்திற்குப் புறம்பான தொழிலாகவோதான் இருக்க முடியும். தரமான, நல்ல சினிமாவைத் தயாரித்து விற்பனை செய்யும் ஒருவருக்கு, அவர் செய்த முதலீடு பல மடங்காகத் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு சினிமாவில் மட்டுமே இருக்கிறது. இரண்டு கோடியில் உருவாக்கப்பட்ட சினிமா, அதன் வாடிக்கையாளர்களான பார்வையாளர்களுக்குப் பிடித்துவிட்டால் அதன் வியாபாரம் தமிழ்நாட்டில் மட்டும் நாற்பது கோடியைத் தாண்டும். அதாவது இரண்டு கோடி முதலீடு. நாற்பது கோடி வியாபாரம். லாப விகிதாச்சாரம் இப்படி அதிக அளவில் இருப்பதால்தான் பல புதிய தயாரிப்பாளர்கள் இத் தொழிலுக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

ஆனாலும், பெரும்பாலானவர்கள் இத் தொழிலில் தோல்வியைத்தான் தழுவுகின்றனர். ஏன்? சினிமாவைத் தொழிலாகப் பார்க்காமல் அதன்மூலம் எளிதாகப் பிரபலமடைந்துவிடலாம், பலரின் நட்பு கிடைக்கும், பெருமையாகப் பேசிக்கொள்ளலாம் என்கிற எதிர்பார்ப்பும் மற்றும் இன்னபிற விஷயங்களை எளிதாக அடைந்துவிடலாம் என்கிற குருட்டுப் புத்தியும்தான் சினிமாவில் தோற்றுப் போகிறவர்களின் மறுபக்கமாக இருக்கிறது. அதாவது சினிமாவைத் தொழிலாகப் பார்க்காமல் சபல மனதோடு பார்ப்பதால் வந்த வினை.

எந்தத் தொழிலில் அதிக ரிஸ்க் இருக்கிறதோ, அந்த தொழிலில்தான் லாபம் அதிகம் இருக்கும். இது சினிமாவுக்கு நன்றாகவே பொருந்தும். சினிமாவில் ரிஸ்க் என்பது பல கட்டங்களை உள்ளடக்கும். இந்தக் கட்டங்களை அடுத்தடுத்து வரக்கூடிய தொடர்களின் விவரமாகப் பார்ப்போம்.

இன்றைய நாளில் ஒரு சினிமாவைத் தயாரிப்பது என்பது மிகச் சவாலான விஷயம்தான். சவால் மட்டுமல்லாது பலரின் கூட்டு முயற்சியில், கடின உழைப்பில் உருவான ஒரு சினிமா ஏன் தோற்றுப்போகிறது? அது பார்வையாளர்களுக்குப் பிடிக்கவில்லை என ஒற்றை வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆனால் அந்த ஒற்றை வரிக்குள் பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன என்பது தோல்வியை அலசி ஆராயும்போது தெரியும்.

வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்காத எந்தத் தொழிலிலும், அதன் தயாரிப்பாளர் அல்லது தொழில் முனைவோன் வெற்றிபெறமுடியாது. ஆக, வாடிக்கையாளர்களைக் கவரவேண்டுமானால் உங்களின் படைப்பு அதாவது பொருள் தரமானதாக இருக்கவேண்டும். அப்படியானால் நீங்கள் தயாரிக்கும் சினிமாவும் தரமானதாக இருக்கவேண்டும். தரமான சினிமா ஒருபோதும் தோற்றுப்போகாது. அப்படியென்றால் நல்ல சினிமா தோற்றுப்போகுமா? நல்ல சினிமாவுக்கும், தரமான சினிமாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? நல்ல சினிமா யாருக்கு நல்ல சினிமாவாக அமைய வேண்டும்? தரமான சினிமா யாருக்குத் தரமானாதாக இருக்கவேண்டும்? இப்படியாக நல்ல சினிமா, தரமான சினிமா பற்றிய குழப்பங்களில் இன்றளவும் சினிமாவுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது. நாம் இந்த விஷயத்தில் நல்ல சினிமா, தரமான சினிமா இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்காமல் ஒரே அர்த்தத்தில் ஏற்றுக்கொள்வோம். ஆனால், இன்னொரு விஷயம் இருக்கிறது. அதுதான் வெற்றிச் சினிமா.

நம் சினிமா உலகம் வெற்றிபெற்ற படங்களையே நல்ல சினிமா என்று கொண்டாடுவதால் வந்த வினையே சினிமாவின் தரத்தை மதிப்பறிய முடியாமல் செய்துவிட்டது. ஏனென்றால், இன்று வெளியாகும் நூறுபடங்களில் சராசரியாக 90 படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. பத்து படங்கள் மட்டுமே வெற்றியைக் கொடுக்கின்றன. இந்த பத்து படங்களில் மோசமான, தரமில்லாத இரண்டு படங்களும் வெற்றிபெற்றிருக்கும். தோல்வியடைந்த 90 படங்களில் ஒரு சில தரமான படங்களும் இடம்பெற்றிருக்கும். இந்த முரண்பாடுகள்தான் சினிமா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் புரியாத புதிராக குட்டையைக் குழப்பி, எப்படியான சினிமா எடுக்கவேண்டும் என்பதில் முடிவெடுக்க திராணியற்றவர்களாய் அவர்களை மாற்றிவிடுகிறது.

நல்ல, தரமான சினிமா என்பது பார்வையாளர்களை திருப்திபடுத்தியிருக்கவேண்டும், தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தைக் கொடுத்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்தச் சினிமா வெற்றிச் சினிமாவாகப் பார்க்கப்படுகிறது. அது சரியா தவறா என்பதையும் பின்னால் பார்ப்போம். ஏனென்றால், பார்வையாளர்களைத் திருப்திபடுத்திய, சில நல்ல சினிமாக்கள் வியாபார ரீதியில் தோற்பதும் உண்டு.

(தொடரும்)

தென்னாடன் (எ) பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *