ஹம்சா பின் லேடன்

ஓசாமா பின்லேடன் மகன் கொல்லப்பட்டது நிஜமா அல்லது வதந்தியா?

slider அரசியல்

 

ஹம்சா பின் லேடன்
ஹம்சா பின்லேடன்

 

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின், அமெரிக்க அரசு அல்கொய்தா தலைவர் பின்லேடனை தீவிரவாதியாக அறிவித்து தேடிவந்த நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிபராக ஓபாமா இருந்த 2011-ம் ஆண்டில் ஒரு ஆபரேஷன் நடவடிக்கை மூலம் அமெரிக்கா கொன்றது. இந்த நடவடிக்கையின்போது அமெரிக்காவால் தேடப்பட்ட பின்லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின்லேடன் கொல்லப்படவில்லை எனவும், அத்துடன் அவர் தப்பித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இதன் பின்னர் அல்-கொய்தா அமைப்பின் புதிய தலைவராக பின்லேடனின் மகன் ஹம்சா பொறுப்பேற்றார் எனவும், அவர்தான் அல்-கொய்தா அமைப்பை வழிநடத்துவதாகவும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவை மிரட்டி ஹம்சா பேசிய வீடியோ காட்சிகள் வெளியானது. இதனையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஹம்சா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.

மேலும், ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்தநிலையில், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் என்.பி.சி ஊடகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உளவுத்துறை உயரதிகாரிகள் மூன்று பேர் இந்தத் தகவலை தெரிவித்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது..

ஹம்சா பின்லேடன்  கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்டதற்கு, “இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.  அமெரிக்க அரசும் இதுதொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பையும் அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை.

1986-ஆம் ஆண்டு பிறந்ததாக கூறப்படும் ஹம்சா, ஒசாமா பின்லேடனின் மூன்று மனைவிகளில் ஒருவரது மகன் ஆவார். 1996-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்த ஒசாமா, அமெரிக்காவுக்கு எதிராக போரை அறிவித்தபோது ஹம்சாவும் அவருடன் இருந்தார். பிறகு அல்-கொய்தா பயங்கரவாதிகளின் சில வீடியோக்களில் கூட ஹம்சா இடம்பெற்றிருந்தார். 2011-ஆம் ஆண்டு இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தபோதும், அந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டபோதும் ஒசாமாவின் அருகில் ஹம்சா இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹம்சா பின்லேடன் அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ரகசிய ஆபரேஷனில் கொல்லப்பட்டு விட்டதாகவும், அந்த தகவலை இப்போது கசியவிட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் பல்வேறு கோணங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இன்னும் சில நாளில் இது சம்பந்தமாக மேலும் வியத்தகு தகவல்கள் நமக்கு கிடைக்கலாம்.

விசாகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *