துரோகியைவிட எதிரிக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை! கர்நாடக அரசியலில் திரும்பவும் திருப்பம்.

slider அரசியல்
Karnataka state Governor Vajubhai Vala, right, administers the oath of office to Bharatiya Janata Party (BJP) leader B.S. Yeddyurappa as Chief Minister of the southern state in Bangalore, India, Friday, July 26, 2019. (AP Photo/Aijaz Rahi)

 

முதல்வராக இருந்த குமாரசாமியின் ஆட்சி, சட்டசபையில் தோற்றபின்பு பா.ஜ.க.வின் எடியூரப்பா கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றிருக்கிறார். இவருக்கு கர்நாடக கவர்னர் 31-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிருபிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். இதனால் பா.ஜ.க. தரப்பிலும் ஆட்சியை தக்கவைக்க பல்வேறு ரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இதயத் துடிப்பை எகிறவைக்கும் செய்திகள் கர்நாடகத்ததிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி   கர்நாடக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224.  இதில் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துவிட்டார். இதனால் சபாநாயகரையும் சேர்த்து மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 221 ஆக உள்ளது. இதில் 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றால்தான் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும். ஆனால், இப்போதைய நிலையில் பா.ஜ.க.விடம் 105 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளார்.  இதனால் பா.ஜ.க. பலம் 106-ஆக உயர்ந்துள்ளது.

ஆகவே, முதல்வர் எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமென்றால் மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் விவகாரத்தில் இன்னமும் 13 பேர் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். ஒருவேளை அவர்களது பதவியை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறித்தால் சட்டசபையில் மொத்தம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். அது எடியூரப்பாவுக்கு சாதகமாகவே அமையும். அதேநேரம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையக்கூடிய ஒன்றை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ரமேஷ் குமார் செய்வாரா? என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில்தான் 34 எம்.எல்.ஏ.க்களை கொண்ட குமாரசாமியின் ம.ஜ.த. பா.ஜ.க.வுடன் இணக்கமாக போக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது அரசை கலைப்பதில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கோஷ்டிதான் தீவிரமாக இருந்தது என்கிற உண்மை தெரிந்து, காங்கிரஸ் மீது ஏக கோபத்தில் குமாரசாமி உள்ளார். எனவே, துரோகி காங்கிரஸைக் காட்டிலும், எதிரி பா.ஜ.க மேல் என்பதால், பா.ஜ.க.வுடன் இணக்கமாக போய்விடலாம் என்ற எண்ணம் குமாரசாமிக்கு வந்துள்ளதாம். இதன்மூலம் தன்னை பழிவாங்கிய காங்கிரஸுக்கு தக்க பதிலடி கொடுக்க அவர் நினைக்கிறாராம்.

 

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் போது கூட பா.ஜ.க.வை குமாரசாமி அதிகம் தாக்கி பேசவில்லை. காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர்கள்தான் பா.ஜ.க.வை அதிகம் தாக்கி பேசினார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலைப்பாட்டிற்கு ஏதுவாகவே நேற்று (ஜூலை 27)  குமாரசாமி தலைமையில் நடைபெற்ற ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நிருபர்களிடம் பேசிய அக்கட்சி மூத்த எம்.எல்.ஏ. ஜி.டி.தேவகவுடா, “பா.ஜ.க. அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கலாம் என சில எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்தனர். சில எம்.எல்.ஏ.க்களோ, கட்சியை பலப்படுத்த, சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவதே நல்லது என்றனர்” என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்த    ஜி.டி.தேவகவுடா, குமாரசாமியின் தந்தை தேவகவுடா போன்றோருக்கு நெருக்கமானவர். எனவே, பா.ஜ.க.வுடன் ம.ஜ.த. நெருக்கமாவது போன்ற ஒரு தோற்றத்தை ஜி.டி.தேவகவுடா வாயிலாக குமாரசாமி வெளியே பரப்பும் முயற்சியாகவும்  இது பார்க்கப்படுகிறது.

கர்நாடக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக ஏற்பட்டுள்ள இந்த புது உறவின் மூலம் எடியூரப்பா அரசு வரும் திங்கள் கிழமை (29 ஆகஸ்ட்) நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடும் என்கிறார்கள் கர்நாடக அரசியல் நோக்கர்கள்.

 

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *