என்ன ஆச்சு காங்கிரஸ் கட்சிக்கு?

slider அரசியல்

 

 

ராகுல் காந்தியின் ராஜினாமாவால் தலைவர் இன்றி தவித்துவரும் காங்கிரஸ் கட்சி, அதிரடி நடவடிக்கையாக காரிய கமிட்டி கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அதன்மூலம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்திருப்பதாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

சோனியா காந்தி நாடாளுமன்ற கட்சி தலைவராக இருந்த போதிலும், உடல் நலக் குறைவு காரணமாக, அவரால் தேசிய அளவில் கட்சி விவகாரங்களில் அக்கறை செலுத்த முடியவில்லையாம். பாராளுமன்றத் தேர்தல் தோல்வியால் ராகுலின் ராஜினாமாவை தொடர்ந்து பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். குறிப்பாக, இளம் காங்கிரஸ் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவும், தன்னுடைய  உத்தரபிரதேச பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.. இதனால் பிரியங்கா காந்தி உ.பி. மாநிலத்தின் முழு பொறுப்பையும் கவனிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் விவகாரங்களில் ஆக்டிவாக பிரியங்காந்தி தான் இருந்து வருகிறார். அண்மையில் உத்தரபிரதேச  மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தோரின் குடும்பத்தை சந்திக்க சென்ற போது அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சாலை மறியலில் அவர் ஈடுபட்டார். தனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை எனக் கூறி, கட்சியிலுள்ள சாதாரண, அடிமட்டத் தொண்டர்களையும் தினந்தோறும் சந்தித்து வருகிறார். இதனால் பிரியங்காவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை  ஏற்க வேண்டும் என காங்கிரஸில் ஒருதரப்பு தீவிரமான முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் பிரியங்காவே சரியான முடிவு என்கிற நிலைக்கு சோனியாவும் வந்துவிட்டாராம்.

ஆனால், பிரியங்காவின் விருப்பம் என்னவென்றால், தேசிய தலைவராக ஆவதைவிட இப்போதிருக்கும் உத்தரபிரதேச பொதுச் செயலாளர் பதவியிலேயே பெரிதாக சாதித்துகாட்ட நினைக்கிறாராம். அவருடைய நோக்கம் எல்லாம் உத்தரபிரதேசத்தை தன் பாட்டி இந்திரா காந்தி காலம் போல மீண்டும் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக மாற்றுவதுதானாம். இதற்கு தேசிய தலைவர் பதவி இடைஞ்சலாக இருக்கும் என்பதால் நிச்சயமாக காங்கிரஸ் தலைவராக பதவியேற்க மாட்டார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

விரைவில் சோனியா காந்தியின் ஆலோசனைப்படி காரியக்கமிட்டி கூட்டப்பட்டவிருக்கிற நிலையில், அதில் பங்குபெறும் 52 உறுப்பினர்களுக்கும் ரகசிய வாக்குச்சீட்டு கொடுக்கப்படுமாம். அதில் அவர்கள் காங்கிரஸின் அடுத்த தலைவராக 4 பேரை குறிப்பிடலாமாம். இதில் அதிக வாக்குகள் பெற்றவரை தலைவராக்க சோனியா எண்ணியுள்ளாராம். இப்படி நடக்கவிருப்பது காங்கிரஸ் கட்சித் தேர்தல் வரலாற்றில் முதன்முறை என்பதும் கவனிக்கத்தக்கது.

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி, தனக்கான தலைவர் பதவியில் ஒருவரை அமர்த்த இவ்வளவு தடுமாறுவது இந்திய ஜனநாயகத்தில் இதுதான் முதன் முறை.

 

தொ.ரா.ஸ்ரீ.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *