அ.ம.மு.கவால் ஆயிரம் ஓட்டுக்கள்கூட வாங்க முடியாது! தங்க தமிழ்ச் செல்வன்

slider அரசியல்

 

அ.ம.மு.க.விலிருந்து தங்க. தமிழ்செல்வன் வெளியேறி தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார். தேனி மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தி தன் ஆதரவாளர்களையும் தி.மு.க.வில் இணைத்து விட்டார். ஆனாலும் பிரிவதற்கு முன்பு டி.டி.வி. தினகரனை எப்படியெல்லாம் விமர்சித்தாரோ அதை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே இப்பவும் விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் வேலூர் தேர்தலோடு தினகரனை இணைத்து தங்க.தமிழ்செல்வன் சமீபத்தில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

மீடியாவுக்கு தங்க.தமிழ்செல்வன் சமீபத்தில் அளித்த பேட்டியில்,. “யார் சொல்வதையும் கேட்காமல் தன்னிச்சையாக தினகரன் எடுத்த முடிவு காரணமாகத்தான் அந்தக் கட்சி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்தத் தேர்தலில் அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வினர் நம்பவில்லை என்பதையும் காட்டிவிட்டது. ஆக, எல்லோரையும் ஏமாற்றி, அவருக்காக பதவியைத் துறந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் ஏமாற்றிவிட்டார் தினகரன். “சிலீப்பர் செல், அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரும் எங்கள் பக்கம் என ஏகத்துக்கும் ஃபுருடா விட்டார்.

 

தேர்தல் தோல்விக்குப் பிறகும்கூட தான் செய்த தவறை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்னும் பெரிய தலைவனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக இல்லை. அ.தி.மு.க.வுக்கு ஒரு மாற்றாக நூறு சதவீதம் தினகரன் இல்லை. அவரது கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது என்றால் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் ஆயிரம் ஓட்டுக்கள்தான் கிடைக்கும். இன்னும் மோசமான நிலைக்குத்தான் அந்த கட்சி போகும் என்பதை உணர்ந்தே வேலூர் தொகுதியில் அ.ம.மு.க போட்டியிடவில்லை’’ என்று காட்டமாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிக்கை விட்டுள்ளார் தங்க தமிழ்ச் செல்வன்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *